பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௮

ஒப்பியன் மொழிநூல்

யென்றும், அது பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டதென்றும் பல தமிழ்த் தொன்னூல்களிற் கூறப்படுகின்றது, அந் நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், மேனாட்டுக் கலைஞர் லெமுர் (Lemur) என்ற ஒரு குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமுரியா (Lemuria) என்றும் அழைக்கின்றனர்.

குமரிநாட்டின் தென்பாகத்தில் பஃறுளியென்றோர் ஆறோடிற்றென்றும், அதன் கரையில் மதுரையென்றோர் நகரிருந்ததென்றும், அதுவே, பாண்டிநாட்டின் பழந்தலைநகர் என்றும், அங்கேயே தலைக்கழகம் இருந்ததென்றும், அக் கழகத்தின் பின் நெடியோன் என்னும் பாண்டியன் காலத்தில் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார் என்றும், அப்போது மதுரையைக் கடல்கொள்ள, நெடியோன் வடக்கே வந்து கபாடபுரத்தை யமைத்துத் தலைநகராகக் கொண்டானென்றும், அங்கே இடைக்கழகம் நிறுவப்பட்டதென்றும், பின்பு கபாடபுரமும் கடல் வாய்ப்பட, பாண்டியன் உள்நாட்டுள் வந்து மணவூரில் இருந்தானென்றும், பின்பு இப்போது வைகைக்கரையிலுள்ள மதுரை கட்டப்பட்டதென்றும், குமரிமுனைக்குத் தெற்கில் குமரி யென்றோர் மலைத்தொடரும் ஓர் ஆறும் இருந்தனவென்றும், அவ்வாற்றுக்கும் அதற்குத் தெற்கிலிருந்த பஃறுளியாற்றுக்கும் இடைநிலச்சேய்மை 700 காதமென்றும், குமரியாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடல் வாய்ப்பட்டதென்றும் பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது.

(1) பஃறுளியாறு :

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” [1]

(2) (தென்) மதுரை :

“தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் ....................... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.” [2]

(3) குமரிமலை

மேற்குத்தொடர்ச்சிமலை, முன்காலத்தில், தெற்கே நெடுஞ்சேய்மை சென்றிருந்ததாகவும், அங்குக் குமரியென்று அழைக்கப்பட்டதாகவும், தமிழ்நூல்களால் தெரிகின்றது.


  1. 1.புறம். 9
  2. 2.இறை,பக்.6