பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம்—குமரிநாடு

௩௯

குமரிமலையையே மகேந்திரமென்று வடநூல்களும், பிற்காலத் தமிழ்நூல்களும் கூறும்.

அநுமன் மகேந்திரமலையினின்று கடலைத் தாண்டி, இலங்கைக்குச் சென்றதாக இராமாயணம் கூறுகின்றது.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்” [1]


என்றார் மாணிக்கவாசகர்.

“..... தாமிரபரணி நதியைத் தாண்டுங்கள்.... அதை விட்டு அப்பாற் சென்றால்..... பாண்டிநாட்டின் கதவைக் [2] காண்பீர்கள்.அதன்பின் தென் சமுத்திரத்தையடைந்து... நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின் கண்ணே, மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளை யுடையதும், பொன்மயமானதும், நானாவித மரங்களுங் கொடிகளுஞ் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டங் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை,”[3]. என்று, சுக்கிரீவன் அங்கதனுக்குச் சொன்னதாக, வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்றும்,

“உன்னதத் தென் மயேந்திரமே”

என்று சிவதருமோத்திரமும், “பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு” என்று இளங்கோவடிகளும் கூறுவதினின்றும், குமரிமலையின் பெருமையை உணரலாம்.

(4) குமரியாறு

மேற்கூறிய குமரிமலையினின்றும் பிறந்தோடிய ஆறு, அம் மலையின் பெயரால் குமரியென்றே அழைக்கப்பட்டது. இங்ஙனமன்றி, ஆற்றின் பெயரே மலைக்கு வழங்கினதாகவும் கொள்ளலாம்.

“குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை”

“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்”


  1. 1.கீர்த்தித்திருவகல்
  2. 2.கபாடபுரம்
  3. 3.நடேச சாத்திரியார் மொழிபெயர்ப்பு.ஒ.மொ.—8