பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௦

ஒப்பியன் மொழிநூல்

"தெற்கட் குமரி யாடிய வருவேன்” [1]

என்று மணிமேகலையிலும்,

“தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”

“குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” [2]

என்று புறநானூற்றிலும்,

“கன்னிதனைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”

“மாமறை முதல்வன் மாடல னென்போன்......
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”[3]

என்று சிலப்பதிகாரத்திலும் வந்திருத்தல் காண்க.

புறநானூற்றில், “குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அயிர் - நுண் மணல். அயிரை நீர்க்குள் அடிமட்டத்திலுள்ள மணலின், அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒருவகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தானிருக்கும். கடல் மீன்களில் அயிரைக் கொத்தது நெய்த்தோலி (நெத்திலி) என்று கூறப்படும். ஆகையால், மேற்கூறிய அடியில் குமரி யென்றது ஆறென்பது தெளிவு. இதைச் சிலப்பதிகாரத்தில் கன்னியை (குமரியை)க் காவிரியோடுறழக் கூறியதாலும், மேற்கூறிய அடிகளில் உள்ள குமரி என்பதை ஆற்றின் பெயராகவே உரையாசிரியர் கூறியிருப்பதாலும் அறியலாம்.

பழம்பாண்டி நாட்டில், முதலாவது,பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல்கொண்டமை,

“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” [4]

என்னும் சிலப்பதிகார வடிகளால் அறியலாம்.

இவ் வடிகட்கு,


  1. 1.மணி.பக்.52,142,148.
  2. 2.புறம்.6,67.
  3. 3.சிலப்.பக்.206,391.
  4. 4.சிலப். 11 : 17—22