பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம்—குமரிநாடு

௪௧

"முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை, அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கையாற்றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு, ஆண்டு மீண்டும் தென்திசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக வென்க” என்று உரை கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார்.

இச் செய்தியையே,

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” [1]

என்று கலித்தொகை கூறுகின்றது.

இதனால், கடல்கோளால் நாடிழந்தவன் பாண்டியனே என்பதும், அதற்கீடாக அவன் சேரசோழ நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அறியப்படும்.

இதையே, “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னுமிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்”[2] என்று, அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.

தென்னாட்டைக் கடல்கொண்டமைக்குக் காரணம், முன்னொரு காலத்தில் பாண்டியன் அதன்மீது வேலெறிந்த செயலாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது.

இந்திரன் ஒருமுறை மதுரைமீது கடலை விட்டதாகவும், அப்போது ஆண்டுகொண்டிருந்த உக்கிரகுமார பாண்டியன் ஒரு வேலை யெறிந்து அக்கடலை வற்றச் செய்ததாகவும், திரு விளையாடற் புராணத்தில் 'கடல்சுவற வேல்விட்ட படலம்' கூறுகின்றது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனின், ஒருமுறை நிலநடுக்கத்தால் கீழ் கடலிலிருந்து ஒரு பேரலை மதுரை வந்து மீண்டதென்பதே. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பல நிலநடுக்க வரலாறுகளினின்று அறிகின் றோம். உவா

  1. 1.கலி.
  2. 2.சிலப்.பக்.803