பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪௨

ஒப்பியன் மொழிநூல்

லேஸ் (Wallace) என்பவர் தாம் உவைகியௌ (Waigiou) தீவிலிருந்து தெர்னேற்றுத் (Ternate)த் தீவிற்குப் போகும் வழியில், நிலநடுக்கத்தால் கடன் மட்டம் உயர்ந்த தாகக் குறிப்பிடுகின்றார்.[1]

தென்னாட்டில் நிகழ்ந்த பல கடல்கோள்களில், ஒன்று பஃறுளியாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரியாற்றுக்குத் தெற்கில் ஓர் எல்லை வரையுள்ள நிலத்தைக் கொண்டதென்றும், இன்னொன்று குமரியாற்றையும் அதற்குத் தெற்கிலும் வடக்கி லுமிருந்த நிலத்தையும் கொண்டதென்றும் தெரியவருகின்றது.

பஃறுளிநாட்டையிழந்த பாண்டியன், தொல்காப்பியப் பாயிரத்தில் “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்றும் மதுரைக்காஞ்சியில், 'நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்' என்றும், புறநானூற்றில் 'நெடியோன்' என்றும் கூறப்படுபவன் ஆவன். முந்தின இருபெயர்களின் பொரு ளும், “மலிதிரை யூர்ந்து” என்னுங் கலித்தொகைச் செய்யுட் செய்திக்கு ஒத்திருத்தல் காண்க.

குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப்பக்கத்துள்ள நிலக் கோடி குமரிமுனை யென்னப்படுகிறது.

கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப்பின், குமரியாற்றைக் கடல்கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதினால், 'தொடியோள் பௌவமும்'[2] என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது.

'தொடியோள் பௌவம்' என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது :

“தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்திய


  1. 1.The Malay Archipelago,p412.
  2. 2.சிலப்.பக்.230