பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம்—குமரி நாடு

௪௩

னாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட, நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீ இயினார். காய்சினவழுதிமுதற் கடுங்கோனீனாயுள்ளார் எண் பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே, எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும் பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லமுதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னைபெறுமாறெனின், 'வடிவேலெறிந்த.... கொடுங்கடல் கொள்ள' என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்”, என்பது.[1]

இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற் காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படிகொண்டாலும், தென் துருவத்திற்கும் குமரிமுனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப்பகுதியும் குமரிமுனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடு நிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம் முக்கண்டங்களுக்கும் நிலைத் திணை, பறவை, விலங்கு,


  1. 1.சிலப்.9:1