பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குமரி நாட்டுக் கடல் கோள்கள்

௪௯

ஆங்கில மதாசிரியர்கள் நோவாவின் வெள்ளத்திற்குக் குறித்த காலம் கி.மு. 2348. இலங்கைப் பௌத்த மதாசிரியர் இலங்கையில் கடைசியாக நேர்ந்த கடல்கோளுக்குக் குறித்த காலம் கி.மு. 2387. தமிழ்நாட்டுக் கடல்கோளும் இதே காலத்ததாயிருத்தல் மிகவும் வியக்கத்தக்கது. ஆரியர் இந்தி யாவிற்கு வந்தது, கி.மு. 3000 போல். அகத்தியர் தென்னாட் டிற்கு வந்தது, கி.மு. 2500 போல்.

தமிழ்நாட்டுக் கடல்கோள், சதாபத பிராமணம், மச்ச புராணம், அக்கினி புராணம், பாகவத புராணம், மகாபாரதம் ஆகிய வடநூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகப் பழைய வரலாறு சதாபத பிராமணத்தது. மகாபாரதத்தது மிகப் பிந்தியதாதலின் மிகப் பெருக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தைப்பற்றி மகாபாரதமும், கல்தேயப் பட்டயமும் கிறித்தவ மறையும் கூறும் வரலாறுகள்,வெள்ளத்தின் நோக்கம், வெள்ளத்துக்குத் தப்பியவரின் பன்மை, வெள்ளத் தின்பின் மக்கட் பெருக்கம் என்ற குறிப்புகளில் ஒத்திருப் பதை, ராகொஸின் தமது 'வேதகால இந்தியா'வில் 340ஆம் பக்கத்திற் காட்டியிருக்கின்றார்.

வடநூல் வெள்ளக்கதைகளில், மனுவென்றும் அரச முனி (ராஜரிஷி)யென்றும் திராவிட நாட்டர சனாகிய சத்திய விரதனென்றும் குறிக்கப் படுகின்றவன், நிலந்தரு திருவிற் பாண்டியனாய்த் தான் இருக்கவேண்டும். திராவிடத் தேசத் தரசன் என்னும் பட்டமும், அரச என்னும் அடையும் அகத் திய முனிவருக் கேலாமையின், அவராயிருக்க முடியாது.

தமிழர் கி.மு. 2000 ஆம் ஆண்டுகட்கு முன்னமே, வாரித்துறை (Maritime) முயற்சிகளுள் சிறந்திருந்தமை. அவர்கள் அயல் நாடுகளோடு செய்துவந்த நீர்வாணிகத் தாலும், பல்வகை நீர்க்கலங்களையுங் குறிக்கத் தமிழிலுள்ள பெயர்களாலும்,

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை”

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆகையால், நோவாவும் அவன் பேழையும், நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் நாவாயுமாய்த்தானிருந்திருத் தல்வேண்டும். இது பின்னர்த் தெளிவாக விளக்கப்படும்.

“குட(மேற்கு)மலைத்தொடர், கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டை நோக்க வடக்கிலுள்ளமை யால், இவ்வெள்ளத் துன்பத்திற்குமுன், வடமலைத் தொடர் எனப்பட்டது.