பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிடம் தெற்கில் சிறத்தல்

௫௯

கௌரவர் என்னும் பெயர்களுடன் ஒலியில் ஒத்திருப்பதாலும், பாண்டியன் என்னும் பெயர் பாண்டவன் என்னும் வடிவிலும் இலங்கைச் சரிதை நூலில் வழங்குவதாலும், பாண்டியன் முதலிய பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்த வடமொழிப் பெயர்கள் என மயங்கினர் கால்டுவெல்.

பாரதத்திற்குக் குறைந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முந்தின இராமாயணத்திற் கூறப்பட்ட பாண்டியன், பாரத வயவராற் பெயர் பெற்றதாகக் கூறுவது, பாட்டனின் முதற் கலியாணத்திற் பேரன் பந்தம் பிடித்த கதையேயன்றி வேறன்று.

இற்றையுலகிலுள்ள நாகரிக நாடுகளெல்லாம், பெரும்பாலும் கிறித்தவ ஆண்டூழிக் குட்பட்டவையாதலானும், மேனாடுகள் தற்கால நாகரிகமடைந்ததெல்லாம் சென்ற மூன்று நூற்றாண்டுகட்குள்ளேயே யாதலானும், பொதுவாய் உலகம் வரவர எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து, சென்ற நூற்றாண்டில் அநாகரிகராயிருந்த பலநாட்டார் இந் நூற்றாண் டில் நாகரிகமடைந்திருக்கவும், தமிழர் இவ்விருபதாம் நூற் றாண்டிலும் மிகத் தாழ்நிலையிலிருப்பதாலும், தமிழின் அல்லது தமிழ் நாட்டின் சரித்திரம் தமிழர்க்கே தெரியாதிருப்பதாலும், மேனாட்டார்க்குத் தமிழர் நாகரிகத்தின் தொன்மை விளங்குவதில்லை. அவருள், இன்னெஸ் (Innes) என்பவரோ தமிழ்க்கழகமென்பதே இல்லையென்று கொண்டவர்.

சோழன் :

“வேழ முடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற்றொண்டை
நன்னாடு சான்றோ ருடைத்து”

எனப் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் பாடியிருப்பதால், முத்தமிழ் நாட்டுள்ளும் சோழநாடு சோற்றிற்குச் சிறந்திருந்தமை அறியப்படும். இன்றும் சோழநாட்டின் சிறந்த பகுதியாயிருந்த தஞ்சை மாவட்டம், தமிழ்நாட்டு நெற்களஞ்சியமாயிருப்பது கவனிக்கத்தக்கது. சோறு என்பது முதற்கண் நெல்லரிசிச் சோற்றையே குறித்தது.

சொல் = நெல். சொல் — சொன்றி = சோறு. சொல் — சோறு. முதற்காலத்தில் நெல் சோழநாட்டில் இயற்கையாகக் கூட விளைந்திருக்கலாம்.