பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௨

ஒப்பியன் மொழிநூல்

அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ் நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், 'முந்து நூல் கண்டு' என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல் காப்பியரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன.

வடநூல் வகைகளில் ஒன்றானதும் காதை நூலுமான காவியத்தின் பெயர், வடமொழியில் காவியமே தோன்றுமுன், தமிழிலக்கண நூலுக்குப் பெயரான தெங்ஙனமெனின், கூறுகின்றேன்.

வடநூல்வகைகளில் ஒன்றான புராணம் என்னும் காதை வகைக்கு, படைப்பு, வழிநிலைப் படைப்பு, மரபுவழி, மனுவூழி, சரித்திரம் என்னும் ஐந்தும் கூறுவது இலக்கணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆயினும், வடமொழியில் புராணமே தோன்றுமுன், தமிழ்நூல்களுக்குப் புராணம் என்னும் பெயர் வழங்கினமை “இனி இடைச்சங்கமிருந்தார்.... என்ப. அவர்க்கு நூல்... மாபுராணமும் ... பூதபுராணமுமென இவையென்ப”[1]என்பதனால் அறியப்படும். இங்ஙனமே காவியம் என்னும் பெயரும் என்க. இதனால், காவியம், புராணம் என்னும் பெயர்கள், முறையே, கவியினால் (செய்யுளாலும் நூற்பாவா லும்) செய்யப்பட்டது, பழைமையானது என்னுங் கருத்தில், முதன்முதல் தமிழ்நாட்டில் தமிழ்நூல்களுக்கே ஆரியரால் வழங்கப்பட்டன என்பதும், அவை வடமொழியிற் காதை நூல்களின் பெயரானதும், காவியத்திற்கும் புராணத்திற்கும் இப்போது உள்ள இலக்கணம் வகுக்கப்பட்டது பிற்காலத்தில் என்பதும் அறியப்படும்.

குலம்: தொல்காப்பியர் தம்மை ஆரிய வேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தரு வத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங் கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றிய


  1. 1..இறை பக்.7.