பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௭௪

ஒப்பியன் மொழிநூல்

யால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத் தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத் தொடரின் பொருள்.

நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன : வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குடமலையும்.

முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்கு நாடே திருச்சிராப்பள்ளிக் கருவூரைத் தலைநகராகக் கொண்ட சேரநாடா யிருந்தது.

“சேரர் கொங்கு வைகாவூர் நனாடதில்”

என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க.

பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்களமாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அக நாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது.

மேலைக்கடற்கரையின் விரிவுபற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம்வேண்டி, ஓர் அம்பெய்து மேலைக் கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது.

'நாற்பெய ரெல்லை' என்றது நாற்றிசை எல்லைகளையேயன்றி நால்வேறு மண்டலங்களையன்று. மேலும், பிற்காலத் துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்பன வாகும்.

சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு, அவர் நாட்டமைப்பிற்கு நேர்முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம்.

இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

இனி, “முரஞ்சியூர் முடிநாகராயர் தொல்காப்பியனார்க்கு முன்னர் இருந்தார் எனக் கூறுதற்கு ஒரு தடை உளது. தொல்காப் பியனார், வியங்கோள் தன்மை முன்னிலையில் வாராதெனக் கூறுகின்றனர். அவ்வாறிருக்க நீ நிலீஇயர் என்றது