பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்

௮௫

புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும்போலா இவை யென்பதூஉம்.... இவ்வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே, இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப் படுமென்பதூஉங் கொள்க,” என்று 13ஆம் நூற்பாவுரையில் கூறியிருப்பதா லறியலாம்.

(2) ஆரிய மணமுறையைத் தமிழ மணமுறையொடு கலத்தல்.

களவியல் முதல் நூற்பாவில் ஆசிரியர் தமிழர் கைகோளாகிய களவொழுக்கத்தை, ஆரிய மணமாகிய கந்தருவத்தொடு (ஒருசார் ஒப்புமைபற்றி) ஒப்பிட்டுக் கூறினரேயன்றி, ஆரிய மணமுறைக்கு இலக்கணங் கூறிற்றிலர்.

தொல்காப்பியத்தில் ஆங்காங்கு ஒருசில வடசொற்கள் அமைந்திருக்கலாம்; சில ஆரிய வழக்கங்களும் குறிக்கப் படலாம். ஆனால், இலக்கணங் கூறுவதுமட்டும் தமிழ் எழுத்துச் சொற்பொருள்கட்கும், தமிழ வழக்கங்கட்குமே என்பதை மறத்தல் கூடாது.

(3) முறைமாற்று.

ஆரிய மணங்கள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம், கந்தருவம் என்னும் முறையிலமைந்திருக்கவும், இவற்றுள் முன்னைய நான் கையும் பின்னர் நான்கென்றும் ஈற்றயல் மூன்றையும் முன்னைய மூன்றென்றும் முறைபிறழக் கூறினார் நச்சினார்க்கினியர்.

(4) தமிழ மணத்திற்கும் ஆரிய மணத்திற்கும் இசைவின்மை.

இதை, “இதற்கு முன்நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும்,கைக்கிளையெனச் சுட்டப்படும்” என நச்சினார்க்கினியரே கூறியிருத்தல் காண்க. இது பின்னரும் விளக்கப்படும்.

(5) பார்ப்பனத் தொடர்பு கூறல்.

பார்ப்பனருக்குத் தொல்காப்பியர் காலத்தில், தமிழரிடத்தில் பாங்கத் தொழிலிருந்ததேயன்றிப் புரோகிதத் தொழிலில் லையென்று, முன்னமே முன்னுரையிற் கூறப்பட்டது. ஆயினும் தெளிவுறுத்தற் பொருட்டு இங்கும் கூறுகின்றேன்.