பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், இன்பவொழுக் கத்தையும் இல்லறத்தையும் சிறப்பாய்க் கூறும் அகத்திணை யியல் களவியல் கற்பியல்களிலேனும், பொதுப்படக் கூறும் பிறவியல் களிலேனும், பார்ப்பார்க்கு அறுதொழிலும் பாங்கத் தொழிலும், ஆவொடுபட்ட நிமித்தங் கூறலும் வாயில் தொழி லுமேயன்றிப் பிற தொழில்கள் கூறப்படவே யில்லை.

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்னும் புறத்திணையியல் அடி, பார்ப்பார் தாமே தமக்குள் செய்துவந்த அறுவகை ஆரிய வைதிகத் தொழில்களைக் குறிக்குமேயன்றித் தமிழரிடம் செய்துவந்த வினைகளைக் குறியா.

பார்ப்பார் தமிழரிடம் செய்த தொழில்களைக் கூறும் தொல்காப்பிய நூற்பாக்களாவன :

கற்பியல்:-

“காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய” (36)

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
....................................
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” (52)

செய்யுளியல் :-

“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
......................................
களவிற் கிளவிக் குரியர் என்ப.” (181)

“..பேணுதரு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.” (182)

“பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.” (189)

மரபியலிற் கூறிய அந்தணர், நாற்பாலாருள் ஒரு பாலாரான தமிழ முனிவரும், முனிவர்போலியரான ஒருசில ஆரியருமேயன்றிப் பார்ப்பாரல்லர். பால்வேறு, குலம்வேறு. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பன பால்கள்.