பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில தொல்காப்பிய நூற்பாக்கள்

௮௭

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்” என்று புறநானூறு கூறுதல் காண்க. பிள்ளை, முதலியார், மறவர், இடையர் என்பன குலங்கள். பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக் குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர் தொல்காப்பியர். அந்தணர், ஐயர், அறிவர், தாபதர் என்னும் பெயர்களெல்லாம் முனிவரைக் குறிக்கும்.

கற்பியலில், திருமண வினையைப்பற்றி நான்கு நூற் பாக்கள் உள்ளன. அவையாவன :

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள்வதுவே.” (1)


“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.” (2)


“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே.” (3)


“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.” (4)

இவற்றுள் பார்ப்பனர் பெயரே யில்லை. கரணமென்பது திருமண வினையைமட்டும் குறிக்கும்; இக்காலத்துப் பார்ப்பனராற் செய்யப்படும் ஆரியமந்திரச் சடங்கைக் குறியாது. நச்சினார்க்கினியர் திருமண வினைக்குக் காட்டாகக் கூறிய செய்யுள் வருமாறு :

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பெருஞ்சோற் றமலை நிற்ப நிறைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக்
கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்

ஒ.மொ—11