பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௮௮

ஒப்பியன் மொழிநூல்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
நீரொடு சொரிந்த வீரித ழலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை.....” (அகம். 86)

இச்செய்யுளில் பார்ப்பனர் தொழில் சிறிதுமின்மை காண்க.

'பொய்யும் வழுவும்' என்னும் நூற்பாவில், பொய் என்றது ஒருவன் ஒருத்தியை மணந்தபின், அவளை மணந்திலேன் எனலை. வழுவென்றது ஒருத்தியை மணந்தபின் பிறரறியக் கைவிடலை. ஐயர் தமிழ முனிவர். தொல்காப்பியர் காலத்தில் பார்ப்பாருக்கு ஐயர் என்னும் பெயர் வழங்க வில்லை. 'என்ப' என்று பிறர்வாய்க் கேள்வியாக, அல்லது நூல்வாயறிவாகத் தொல்காப்பியர் குறித்திருப்பது. தமிழர் கரணத்தோற்றத்தின் தொன்முது பழைமையைக் காட்டும். அப்போது ஆரியக்குலம் இந்தியாவில் இல்லவேயில்லை. பொய்யும் வழுவும் சிறுபான்மைத் தமிழராலேயே நிகழ்ந்தன. ஆயினும், பெண்டிர்க்குப் பொதுப்படக் காப்புச் செய்யும் பொருட்டுக் கரணம் வகுக்கப்பட்டது. மலையாள நாட்டில் வழங்கும் மருமக்கட்டாயமும் பெண்களின் பாதுகாப்பிற் கேற்பட்டதே.

“பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு” என்பதற்கு, இளம்பூரணர் உரைத்த உரையாவது :

“பன்னிரண்டாவன : பிரமம் முதலிய நான்கும், கந்தருவப் பகுதியாகிய களவும் உடன்போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற் பரத்தையும் அசுரம் முதலாகிய மூன்றும்” என்பது.

இங்ஙனம், இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஆரியத்தைக் கலந்துணர்ந்தமையாலேயே தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளைக் காணமுடியாது போயினர். அக்காலத்தில், சரித்திரம், குலநூல், மொழிநூல் முதலிய கலைகளில்லாமை யால், அவர்மீதும் குற்றஞ் சுமத்தற்கிடமில்லை.

இனி, மேற்கூறிய களவியல் நூற்பாக்கட்கு உண்மைப் பொருள் வருமாறு :