பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சில தொல்காப்பிய நூற்பாக்கள்

௮௧

கைக்கிளைக்குறிப்பு மூன்றும், ஐந்திணையும் பெருந்திணைக் குறிப்பு நான்குமாகப் பாங்கன் நிமித்தம் பன்னிரண்டாம்.

“காமஞ் சாலா இளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தலும்;
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்தலும்;
சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறலும்”


(ஆகிய மூன்றும்) புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. (அகத். 53) இவையே, “முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே” என்று சுட்டப்பட்டவை. மூன்று நிகழ்வுகள் ஒரு புணர்சொற்றொடரில் (Compound Sentence) இணைத்துக் கூறப்பட்டுள என்க.

“ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே” (அகத். 54)

இவையே, “பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே” என்று சுட்டப்பட்டவை. 'முன்னைய', 'பின்னர்' என்னும் முறையையும், 'மூன்றும்' 'நான்கும்' என்னுந் தொகைகளையும் ஓர்ந்தறிக.

அன்பின் ஐந்திணை வெளிப்படை. யாழோர் என்றது, இசையிற் சிறந்த, இல்லற வொழுங்கற்ற ஓர் ஆரிய வகுப்பாரை. யாழ் இசை. யாழோரைக் கந்தருவர் என்பர் வடநூலார்.

கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என்பவை, முறையே, ஒருதலைக் காமமென்றும், இருதலைக் காமமென்றும், பொருந்தாக் காமமென்றுங் கூறப்படுகின்றன. இவை தெளிவும் நிறைவுமான இலக்கணங்களல்ல.

கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பாலும் (சிறிது) காலமே நிகழ்பவான காமக் குறிப்புகளும் புணர்ச்சிகளுமாகும். “கைக்கிளைக் குறிப்பே”, “பெருந்திணைக் குறிப்பே” என்று கூறுதல் காண்க. அன்பினைந்திணை அங்ஙனமன்றி, களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளுள்ள நீடித்த அன்பொத்த இன்பவாழ்க்கையாகும்.