பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர் காலம்

௬௧

அரசரைத் திருமாலின் வழியினராகக் கூறுவது தமிழ்நாட்டு வழக்கமென்பதும், திருமாலின் முதல் ஐந்து தோற்றரவுகளும் தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்தனவென்பதும் பின்னர்க் கூறப்படும்.

அரசர் பதினெண்மரும் பதினெண் கோடி வேளிரும் என்றது, பதினெட்டுத் தமிழரசரையும் அவர்க் கீழிருந்த பதினெண் வகுப்புத் தமிழக் குடிகளையும். வேளிர் வேளாளர். அருவாளர் அருவா நாட்டார். பதினெண்கோடி வேளிர் என்றது பதினெண் குடி வேளிர் என்பதன் ஏட்டுப்பிழை.

காடு கெடுத்து நாடாக்கியென்றது, அக்காலத்தில் மக்கள் வழக்கின்றியிருந்த பல காடுகளை அழிப்பித்து, அவற்றில் துவரையினின்றும் கொண்டுபோந்த குடிகளைக் குடியேற்றியதை.

அகத்தியர் பொதியின்கண்ணிருந்தது, அலைவாயை (கபாடபுரத்தை)க் கடல் கொண்டபின்.

துவரை என்பது ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் பெயர். தில்லைமிக்க இடத்தைத் தில்லை என்றாற்போல, துவரைமிக்க இடத்தைத் துவரை என்றது இடவனாகுபெயர். துவரை என்பது துவரா(பதி), துவாரா(பதி), துவாரகா என்று ஆரிய வடிவங் கொள்ளும்.

துவரை என்ற தென்னாட்டு நகர்ப்பெயரையே, பிற் காலத்தில் கண்ணன் ஆண்ட இடமாகிய, வடநாட்டு நகர்க்கிட்டனர். மைசூர்த் துவரைநகர் மிகப் பழைமையானதென்பதை. அது அகத்தியர் காலத்திலிருந்ததாக நச்சினார்க்கினியர் கூறுவதாலும்,

“உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே” [1]

என்று இருங்கோவேள் கி.பி. 2ஆம் நூற்றாண்டினரான கபிலராற் பாடப்பெற்றிருப்பதாலும் அறியலாம்.

மேற்கூறிய புறப்பாட்டிற் குறிக்கப்பட்ட துவரைநகர், கண்ணன் ஆண்ட வடநாட்டுத் துவாரகையாகப் பல்கலைக் கழக அகராதியில் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.


  1. 1.புறம். 201