பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர் காலம்

௧௩

மிருக்கலாம். மைசூர் நாட்டில் சிறுத்தைப் புலிகள் நிறைந்தி ருப்பதும், அடிக்கடி அவை சிற்றூர்களுக்கு வந்து குடிகளுக்குத் துன்பம் விளைவிப்பதும், வேட்டைக்காரர் அவ்வப் போது அவற்றைக் கொல்வதும், தாளிகை வாயிலாய் யாவரும் அறிந்தவையே. ஐயரவர்கள் குறிப்பிலேயே இருவேறு வரலாறுள.

'வடபால் முனிவரன் தடவுட்டோன்றி'னதாக இருங்கோவேளைப் பற்றிப் புறநானூற்றிற் கூறியிருக்கும் செய்தி, கற்பனையான பழமைக்கூற்றாதலின், ஆராய்ச்சிக்குரியதன்று.

இதுகாறும் கூறியவற்றால், அகத்தியர் பாரதக் காலத்திற்கு முற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அக்காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரல்லர் என்பதும், இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவர் என்பதும், முதலிரு கழகமும் இம்மியும் ஆரியச் சார்பில்லா முழுத் தூய்மை பெற்றவை என்பதும்; இடைக் கழகக் காலத்தில் ஆரியம் என்னும் பெயரே உலகில் தோன்றவில்லை யென்பதும், அறிந்து கொள்க.

தமிழ் எண்ணிற்கு மெட்டாக் காலத்துக் குமரிமலை நாட்டில் தோன்றிய உலக முதல் ஒருதனிச் செம்மொழி யாதலின், அதன் தொன்மையை உணராத பிற்காலத்தார் அகத்தியரைத் தலைக் கழகத்தினராகவும் தொல்காப்பியரை இடைக்கழகத்தினராகவும் கட்டிக் கூறிவிட்டார். இதற்கு முதலிரு கழக நூல்களும் அழிக்கப் பட்டுப் போனமையும், தமிழிலக்கியத்திற்கு ஆரிய மூலம் காட்டப்பட்டமையும் பிற்காலத் தமிழர்க்கு வரலாற்றுணர்ச்சி அற்று விட்டதுமே, கரணியமாகும்.

ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இக் காலத்திலேயே பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவுபற்றி, தமிழத் தமிழ்ப் புலவர்க்கில்லாத தனியுயர்வு பிராமணத் தமிழ்ப் புலவர்க்கேற்படின்; ஏதிலரை நம்பி எளிதில் ஏமாறும் பழங்குடிப் பேதைமையும், வரலாற்றொடு கூடிய ஒப்பியன் மொழிநூலறிவின்மையும், மிக்க பண்டைக் கால அல்லது இடைக்காலத் தமிழரிடை ஐரோப்பியரை யொத்த வெள்ளை நிறமும் வல்லோசை மிக்க மந்திரமுங் கொண்டிருந்த வேத ஆரியர்க்கு எத்துணைப் பெருங் கண்ணியம் ஏற்பட்டிருத்தல் வேண்டும்!