பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௲௪

ஒப்பியன் மொழிநூல்

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

தொல்காப்பியர் காலத்தில், தமிழிற் பல கலைகளும் நூல்களுமிருந்தனவேனும், அவற்றுள், தொல்காப்பியந் தவிர வேறொன்றும் அகப்படாமையான், பண்டைத் தமிழ்க் கலை களைப்பற்றி விரிவாயெடுத்துரைக்க இயலவில்லை. ஆயினும், ஆனையடிச்சுவடு கண்டு ஆனை சென்றதை யறிதல் போல, தொல்காப்பியத்தில் ஆங்காங்குள்ள சில குறிப்புகளினின்று, தொல்காப்பியர் காலத்தில் எவ்வெக் கலைகள் தமிழிலிருந்தன வென்று இங்கெடுத்துக் கூறுகின்றேன்.

(1) இலக்கணம்

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இலக்கணமிருந்தமைக்குத் தொல்காப்பியம் ஒன்றே போதிய சான்றாம். தொல்காப்பியரின் உடன் மாணவரான அவிநயனார், காக்கை பாடினியார் முதலிய பிறரும் தமிழிலக்கண மியற்றினதை யாப்பருங்கல விருத்தியுரையா லறியலாம்.

பிறமொழி யிலக்கணங்களெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என நான்கு பிரிவேயுடையன. ஆனால், தமிழோ அவற்றுடன் பொருள் என்னும் சிறந்த பிரிவையுமுடையது. யாப்பு, அணி என்பவற்றைப் பொருளில் அடக்கித் தமிழிலக்கணத்தை மூன்றாகப் பகுப்பதே பண்டை வழக்கம். யாப்பும் அணியும் ஒரு செய்யுளின் பொருளை யுணர்தற்குக் கருவிகளாதலின், அவற்றைப் பொருளிலக்கணத்தினின்றும் பிரிக்கக் கூடாதென்பது முன்னோர் கருத்து. யாப்பருங்கலம், யாப்பருங் கலக்காரிகை என்பவை, தொல்காப்பியத்திற் கூறப் படாத, செய்யுளிலக்கணங்களைக் கூறுவதற்குத் தனிநூல் களாயெழுந்தனவேயன்றி, மூன்றாயிருந்த தமிழிலக்கணப் பிரிவை நான்காக்குவதற்கன்று.

தமிழிலுள்ள பொருளிலக்கணத்தை இற்றைத் தமிழர் சரியாயுணரவில்லை. பார்ப்பனரோ அவரினும் உணரவில்லை. பண்டைத் தமிழர் மதிநுட்பமெல்லாம் பழுத்துக்கிடப்பது பொருளிலக்கணம் ஒன்றில்தான். ஒரு மக்களின் நாகரிகத்தைக் காட்டச் சிறந்த சின்னம் மொழியென்று முன்னர்க் கூறப்பட்டது. பல கருத்துகளையும் தெரிவிப்பதற்குரிய சொற்களும் சொல் வடிவங்களும், விரிவான இலக்கியமும் ஒரு மொழியின் சிறப்பைக் காட்டும். இலக்கியத்தினும் இலக்கணம் சிறந்தது. இலக்கணத்திற் சிறந்தது தமிழ்மொழி ஒன்றே.