பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ் நூல்களும் கலைகளும்

௬௭

பெள் — பெண். பெட்பு = விருப்பம். பெண் — பேண், பேணுதல், விரும்புதல் அல்லது விரும்பிப் பாதுகாத்தல். பெண் — பிணா — பிணவு — பிணவல். பெள் + தை = பெட்டை — பெடை - பேடை — பேடு, பெண் வீட்டிலிருப்பவள். இதனாலேயே, இல், மனை, குடி என்னும் வீட்டுப்பெயர்கள் மனைவியையுங் குறிக்கலாயின. அகத்திலுள்ள மனைவிபற்றியது அகப் பொருள். ஆண்பால் மறத்திற்குச் சிறந்தது. ஆள் — ஆண். ஆண் என்பது ஆள்வினைத் திறமையுடையது அல்லது மறமுடையது என்னும் பொருளது. ஆட்சி, ஆளல், ஆண்மை என்னுஞ் சொற்களை நோக்குக. ஆண் — (ஆடு) — ஆடவன். (ஆடு) — ஆடூஉ. ஆண்மைத் தொழில் போர்த்தொழிலும் பொருளீட்டலும். அகத்துக்கு (வீட்டுக்கு)ப் புறம்பே நிகழும் தொழில் புறப்பொருள்.

பொருளிலக்கணத்தைப்பற்றிச் சுருங்கச் சொன்னால், எல்லாக் கருத்துகளும் தொழிலும் பற்றிய மக்கள் வாழ்க்கையையே. அகம் புறம் என்னும் இருவகையால் நுட்பமாய் ஆராய்ந்தனர் முன்னோர் எனலாம். பண்டைத் தமிழர் கடவுள் வழிபாட்டிலும் வீடுபேற்று முயற்சியிலும் சிறந்திருந்தமையின், அகப்பொருளிலக்கணத்தைக் கடவுட்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும் பிறிதுமொழி யுவமையாகவுங் கொண்டனர். இதையறியாது சில பார்ப்பனர் அகப்பொருளிலக் கணத்தைக் காமநூலென்கின்றனர்.

“ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின் காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர் ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர் சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”

என்ற திருக்கோவைச் சிறப்புப்பாயிரச் செய்யுளே அவர்க்குச் சிறந்த விடையாகும்.

காமநூல் புணர்ச்சியின்பத்திற் கேதுவான பொருள்க ளையே கூறுவதாகும். ஒருவன் போர், கல்வி முதலிய தொழில் பற்றித் தன் மனைவியைவிட்டுப் பிரிந்துபோவதும், அவளிடம் சொல்லாமல் ஏகக் கருதியிருக்கும்போது, இரவில் தன்னையறியாமல் கனவிலுளறித் தன் போக்கை அவளுக்குத் தெரிவித்து விடுவதும் எங்ஙனம் காமநூலுக்குரிய பொருள் களாகும்? தமிழரின் இல்லற வாழ்க்கையைக் கருத்துப் புலனாக்கும் ஓவியமே அகப்பொருளிலக்கண மென்க.