பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬

ஒப்பியன் மொழிநூல்

தென்றும், அங்ஙனமன்றிப் பிறர்க்குப் புலப்படக் கூறுவதாய் இன்பத்திற்குப் புறமானதெல்லாம் புறமெனப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.

சிலர் அகப்பொருளிலக்கணத்தை அன்புநூல் (Science of Love) என்றும், புறப்பொருளிலக்கணத்தைப் போர்நூல் (Science of War) என்றும் கொண்டனர். அன்பு சிறப்பது பெரும்பாலும் கணவன் மனைவி யிருவரிடையே யாதலாலும், அன்பிற்கெதிரான பகையாலேயே போர் நிகழ்வதாலும் இவ்வுரைகோளும் ஒருவாறு பொருந்துவதே.

மாந்தன் உலகில் அடையக்கூடிய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றனுள், அறம் தனித்திராது ஏனையிரண்டையும் பற்றியே யிருக்கும். அறவழியால் ஈட்டுவதே பொருள். அறவழியால் நுகர்வதே இன்பம். அறவழியால் ஈட்டாத பொருளாலும், அல்லற வழியால் இன்ப நுகர்ந்து கொண்டும், செய்யப்படும் அறம் அறமாகாது. இன்பத்தை நுகர்வதற்குப் பொருள் கருவி. ஆகவே, பொருளீட்டுவதும் அதனால் இன்பம் நுகர்வதுமாகிய இரண்டே எல்லா மக்களின் தொழில்களும். உலக இன்பத்திற் சிறந்தது பெண்ணின்பம் அல்லது மனைவியின்பம். இதுபெரும்பாலும் வீட்டிலேயே நுகரப்படுவது. பொருள் முயற்சி பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே நிகழ்வது, மக்கள் தலைவனான அரசனது பொருள் முயற்சி போர். அகம் வீடு. புறம் வீட்டிற்கு வெளி. புறப்பட்டான் என்னுஞ் சொல், வீட்டிற்கு வெளிப்பட்டான் என்ற கருத்துப்பற்றியே, வழிப்போக்குத் தொடங்கினான் என்று பொருள்படுவதாகும். ஆகவே, அகத்தில் நிகழ்வதை அகம் என்றும், புறத்தில் நிகழ்வதைப் புறமென்றும் முன்னோர் கொண்டனர் எனினும் பொருந்தும். அகம் என்பது செந்தமிழ்ச் சொல்லே. பார்ப்பனர் தம் வீடுகளைப் பிற குலத்தார் வீடுகளினின்றும் பிரித்துக் காட்டுவதற்கு அகம் என்னுஞ் சொல்லைத் தெரிந்து கொண்டனர்.

இனி, மக்கள் ஆண் பெண் என இருபாற்படுதலின், அவ்விருபால்பற்றிய தொழில்களையும் அகம் புறம் என வகுத்துக் கூறினர் என்று கொள்ளினும் பொருந்தும். உயர் திணையில் பெண்பாலே அழகுடையது. பெண் என்னும் சொல் விரும்பத் தக்கது அல்லது விரும்பத்தக்கவள் என்னும் பொருளையுடையது. விரும்பத்தகுவது இன்பமும் அழகும்பற்றி. இன்பத்திற்கு அழகு துணையாவது. இதனால், காமர் என்னும் விருப்பம்பற்றிய சொல் அழகு என்னும் பொருள்படுவதாயிற்று.