பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௦௮

ஒப்பியன் மொழிநூல்

“இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனாலணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது.

இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.”[1]

உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறை யுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள்களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதாயமைந்து, அந்நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப்பதாகும். இது “மன்ன னெப்படி மன்னுயி ரப்படி” என்னும் நெறிமுறை பற்றியது. உள்ளுறுத் தியற்றப்படும் உவமம் உள்ளுறையுவமம்.

கா:

“வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற
மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான்
வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை
பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர.”
(கலித். 66)


“இதனுள், 'வீங்குநீர்' பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள்வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர் வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து, ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோ னுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.”


  1. 1.தொ.உவ.37.பேரா.உரை.