பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௦௯

இலக்கியம்

தமிழிலக்கியத்தை இயல், இசை, நாடகம் என மூவகையாக வகுத்து, அவற்றை முத்தமிழ் என்றனர் முன்னோர்.

இயல்பாகவுள்ளது இயற்றமிழ்; அதனொடு அராகமும் தாளமும் சேர்ந்தது இசைத்தமிழ். இசைத்தமிழொடு ஆட்டஞ் சேர்ந்தது நாடகத்தமிழ்.

முத்தமிழில் ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவுடையது. தொல்காப்பியம் போன்றது இயற்றமிழிலக்கணம்; மணிமேகலை போன்றது இயற்றமிழ் இலக்கியம். இசை நுணுக்கம் போன்றது இசைத்தமிழ் இலக்கணம்; தேவாரம் போன்றது இசைத்தமிழிலக்கியம். செயிற்றியம் போன்றது நாடகத்தமிழ் இலக்கணம்; சீகாழி அருணாசலக் கவிராயர் இயற்றிய இராமாயண நாடகம் போன்றது (ஆனால் உரையிடையிட்டது) நாடக இலக்கியம். அகத்தியம் முத்தமிழிலக்கணம்.; சிலப்பதிகாரம் முத்தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம்.

தமிழ்நாடக விலக்கியத்தைச் சிலர் ஆரிய மொழிகளிலுள்ள நாடகத் தொடர்நிலைச் செய்யுள் போன்றதாகக் கருதுகின்றனர். இசைப்பாட்டும் உரையுமாக அமைந்து நடித்தற்கேற்ற நிலையிலுள்ளதே தமிழ்நாடக விலக்கியமாகும்.

இலக்கணம் இலக்கியம் என்னுஞ் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே.[1] இவை இலக்கு என்னும் பகுதியடியாய்ப் பிறந்து முறையே, அணம், இயம் என்னும் ஈறு பெற்றவையாகும். இலக்கு இலை. இலக்கித்தல் எழுதுதல் (சீவக. 180). இலக்கணம், இலக்கியம் என்பவற்றின் திரிபே, லக்ஷணம், லக்ஷியம் என்னும் வடசொற்கள், வடமொழியில் இலக்கணத்தைக் குறிக்கும் சொல் வியாகரணம் என்பது. செந்தமிழ்ச் சொற்களைத் திரித்து வடநூல்களில் வரைந்துகொண்டு அவற்றை வடசொல்லென்று வற்புரைப்பது ஆரிய வழக்கம். இலக்கணத்தைக் குறிக்க இலக்கணம் என்ற சொல்லன்றி வேறு சொல் தமிழில் இல்லை. இங்ஙனமே இலக்கியத்திற்கும். சிறந்த இலக்கணமும் இலக்கியமுமுடைய தென்மொழிக்கு அவற்றைக் குறிக்கும் சொல் இல்லையென்றால், அறிஞர் நம்ப முடியுமா?


  1. 1."இலக்கணம்','இலக்கியம்'என்னும் சொற்களைப் பற்றித் தமிழ்ப் பொழிலில் யான் வரைந்துள்ள கட்டுரையைக் காண்க.