பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬௧௦

ஒப்பியன் மொழிநூல்

இசைத்தமிழ் - Musical Literature

இசையாவது ஓசை. அது பாட்டிற்குரிய இன்னிசையைச் சிறப்பாயுணர்த்திற்று. இன்னிசை = சங்கீதம். (இன்னிசையரங்கு = சங்கீதக் கச்சேரி).

தமிழ் தலைக்கழகக் காலத்தில் இயலிசை நாடகமென முப்பிரிவா யிருந்ததென்பது, அகத்தியம் முத்தமிழிலக்கண நூல் என்பதால் அறிகின்றோம். தொல்காப்பியம் இயற்றிமிழ் இலக்கண நூலாயினும், இசைத்தமிழ்க் குறிப்புகள் ஆங்காங்கு சிலவுள. அவையாவன :

“அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (எழு.33)


“.....செய்தி யாழின் பகுதியொடு தொகைஇய
அவ்வகை பிறவும் கருவென மொழிப” (அகத்.20)


“துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (களவு. 1)


“பாணன் பாடினி.... வாயில்கள் என்ப.” (கற். 52)


“.... பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே” (செ. 173)

என்பன.

இசை எல்லா நாட்டிற்கும் பொதுவேனும், தமிழர் அதில் தலைசிறந்திருந்தமைபற்றி அதை மொழிப்பகுதியாக்கினர். இழவு வீட்டில் அழுவதுகூட அராகத்தோடு அழுவது தமிழர் வழக்கம். அராகத்தோடு அழாவிட்டால், அழத் தெரியாதவராக எண்ணப் படுவர்.

இசைக்கு உறுப்பாவன அராகம், தாளம் என இரண்டு. அராகம் அர் என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக்குறிக்கும் சொல். அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா வுறுப்புக்களில் ஒன்றற்குப் பெயராயமைந்ததும் இச் சொல்லே. அரங்கன் என்பது ரங்கன், இரங்கன் என்று வழங்கினாற்போல, அராகம் என்பதும் ராகம், இராகம் என வழங்குகின்றதென்க.

தாளம் என்பது பாடும்போது காலத்தைத் துணிக்கும் துணிப்பு. தாள் = கால். தாள் - தாளம். பாடும்போதும் ஆடும் போதும், காலையாவது கையையாவது, அசைத்தும் தட்டியும் தாளத்தைக் கணிப்பது இன்றும் வழக்கம். தாளத்திற்குப் பாணி கொட்டு என்றும் பெயர். பாணி = கை.