பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௧௩

சுவராந்தம் என வடசொல்லால் தற்காலத்தில் வழங்குகின்றனர். பண்ணை இக்காலத்தில் ராகம் என்கின்றனர். அது அராகம் என்பதன் முதற்குறை.

பண்களைத் திரிக்கும் முறைகளில் மிக விரிவானது பாலையெனப்படும். அது ஆயப்பாலை, வட்டப்பாலை, திரிகோண (முக்கோண)ப் பாலை, சதுர (நாற்கோண)ப் பாலை என நால்வகை. இந்நூல்வகையும், ஏழிசைகளையும் முறையே 12 ஆகவும் 24 ஆகவும் 48 ஆகவும் 96 ஆகவும் பகுக்கும் என்பர். அவற்றுள், ஆயப்பாலையினின்று, செம்பாலைப்பண் (தீர சங்கராபரணம்), படுமலைப் பாலைப்பண் (கரகரப்பிரியா), செவ்வழிப் பாலைப்பண் (தோடி), அரும்பாலைப்பண் (கல்யாணி), கோடிப் பாலைப்பண் (அரிகாம்போதி), விளரிப் பாலைப்பண் (பைரவி), மேற்செம் பாலைப்பண் (சுத்த தோடி) என்னும் ஏழுபண்கள் பிறக்கும்.

பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என நால்வகைப்படும். இவை யாழெனவும் பண்ணெனவும் பெயர் பெறும். ஏழ்—யாழ் = ஏழிசையுடையது.

இனி குல(ஜாதி)ப் பண்கள் என நான்குண்டு. அவை அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்பன. இவற்றைப் பெரும்பண்களோடுறழப் பதினாறாம். இவற்றை யெல்லாம் கருணாமிர்த சாகரத்துட் கண்டுகொள்க.

பிங்கலத்தில் 103 பண்கள் கூறப்பட்டுள்ளன. தேவாரத்தில் 24 பண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. “நரப்படைவாலு ரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண் ணூற்றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப். ப. 109) பண்டைத் தமிழிசையின் பரப்பை ஒருவாறுணரலாம்.

குறிஞ்சி, நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை முதலியவாகப் பண்களுக்குரிய தனித்தமிழ்ப் பெயர்களையெல்லாம் மறைத்து, இடுகுறியான வடமொழிப் பெயர்களை வழங்கி இசைத்தமிழைக் கெடுத்தனர் ஆரியர்.

இசைக்கருவிகள் தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி என நால்வகைப்படும். வாய்ப்பாட்டை மிடற்றுக் கருவியென ஒரு கருவியாகக் கூறுவர் சிலர்.

பண்ணைப் பாடும்போது, ஏற்றியும் இறக்கியும் அலுக்கியும் இனிமை வளர்ப்பது ஆளத்தி யெனப்படும். அது இக்காலத்தில்.