பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௨௦

ஒப்பியன் மொழிநூல்

வடநூல்களில் ஒரேயொருவகைத் திரைமட்டும் கூறப்பட்டுள்ள தாகச் சொல்லப்படுகிறது.

நாடகம்பற்றிய பிறவிலக்கணங்களை யெல்லாம், அடியார்க்குந ல்லார் அரங்கேற்று காதைக் குரைத்த வுரையினின்றும் அறிந்து கொள்க.

இசையிலும் நாடகத்திலும் இதுபோது வழங்கும் வடசொல் மிகுதியைக் கண்டு, இவை ஆரியக்கலைகளோ என்று ஐயுறற்க.இவற்றை ஆரியக்கலைகளாகக் காட்டவேண்டியே, தென் சொற்கட்குப் பதிலாக வடசொற்களைப் புகுத்திவிட்டனர் ஆரியர் என்க. குரல் என்பதைக்கூடச் சாரீரம் என்று சொன்னால் பிறவற்றைப் பற்றி என் சொல்வது?

இசைத்தமிழும் நாடகத்தமிழும் மறைந்துபோனமைக்கு ஆரியமும் சமணமும் பெரிதுங் காரணமாகும்.

தொல்காப்பியத்தினின்று அறியும்பாக்களும் நூல்களும்

அறுவகைப்பாக்கள் — (Poetic Metres)

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபாடல் என்பன.

இருபான் வண்ணங்கள்— (Poetic Rhythms)

பா அ வண்ணம், தாஅ வண்ணம், வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம், அளபெடை வண் ணம், நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர (ஓவிய) வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம், முடுகு வண்ணம் என்பன.

பொருளீடுகளும் நூல்வகைகளும்—(Different Themes and Kinds of Poetry)

காமப் பொருளீடுகள்— (Amatory Themes)

கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை, மடல் முதலியன.