பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியர்காலத் தமிழ்நூல்களும் கலைகளும்

௧௩௫

கணிதநூல் (Arithmetic)

கண் + இதம் = கணிதம். கண் = கருது, மதி, அள. கண் + இயம் = கண்ணியம் (மதிப்பு). கண் — கணி, to calculate. கணி + கை = கணிகை (தாளங்கணித்தாடும் கூத்தி). கணி + அன் = கணியன் (ஜோதிடன்). கண் + அக்கு = கணக்கு. அக்கு என்பது ஓர் ஈறு. கா: இலக்கு இலை, பதக்கு. கணி — குணி -—அளவிடு. கண், கணி என்னும் தென்சொற்களையே gan, gani என உரப்பி யொலித்து வடசொல்லாகக் காட்டுவர். கண்ணுதல் என்னுஞ் சொல், அகக்கண்ணின் தொழிலைக் குறித்தலால் வடமொழி வடிவங்கள் தென்சொற்களின் திரிபே என்பது தெற்றென விளங்கும். “கண்படை கண்ணிய”, “கபிலை கண்ணிய” என்று தொல்காப்பியத்திலேயே வருதல் காண்க.

அரை, குறை, கலம், பனை, கா, பதக்கு, தூணி, உரி, நாழி என்னும் அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும், தொல்காப்பியத்தில், தொகைமரபு, உயிர்மயங்கியல் என்னும் இயல்களிற் கூறப்பட்டுள்ளன.

தொகைமரபில், 28ஆம் நூற்பாவில், அளவுப்பெயர்களும் நிறைப்பெயர்களும் க ச த ப ந ம அ உ என்னும் ஒன்பதெழுத்துகளில் தொடங்குமென்று கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியர் அதற்கு,

“எடுத்துக்காட்டும்: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு இவை அளவு. கழஞ்சு சீரகம் தொடி பலம் நிறை மாவரை அந்தை இவை நிறை.... இம்மி ஓரடை இடா என வரையறை கூறாதனவுங் கொள்க...... தேயவழக்காய் ஒரு ஞார் ஒரு துவலி என்பனவுங் கொள்க” என்று உரை கூறியுள்ளார்.

புள்ளிமயங்கியல் 98ஆம் நூற்பாவில், 'ஐ', 'அம்', 'பல்' என முடியும் சில பேரெண்ணுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள.

அவை தாமரை குவளை சங்கம் வெள்ளம் ஆம்பல் முதலியன. பரிபாடல் 2ஆம் பாட்டில் “நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்” என்று சில மிகப் பேரெண்கள் கூறப்பட்டுள்ளன. சங்கம் இலக்கங் கோடியென்றும், தாமரை கோடாகோடியென்றும் சொல்லப்படுகின்றது.

தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டுள்ள துண்மையாயின், பண்டைத் தமிழில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிற்றிடப்

ஒ.மொ.—14