பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௪௬

ஒப்பியன் மொழிநூல்

தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பை உணர்த்துவனவாகும். இவற்றின் விரிவைச் சிலப்பதிகாரத்துட் கண்டுகொள்க.

பண்டைத் தமிழர் நாடகவரங்கு அமைத்த நுட்பம் (சிலப். 113-16) மிக வியக்கத்தக்கது.

வளைவிற்பொறி, கருவிரலூகம், கல்லுமிழ்கவண், பாகடு குழிசி, காய்பொன்னுலை, கல்லிடுகூடை, தூண்டில், தொடக்கு, ஆண்டலையடுப்பு, கவை, கழு, ஐயவித்துலாம், கைபெயரூசி, சென்றெறிசிரல், பன்றி, பனை, நூற்றுவரைக்கொல்லி, தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும்பாம்பு, கழுகுபொறி, புலிப் பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற்பொறி[1] முதலிய மதிற்பொறி வகைகள், பண்டைத் தமிழரின் படிமைக் கலையையும்(Sculpture) சூழ்ச்சியக் கலையையும் (Engineering) தெரிவிப்பனவாகும். படிமை — பதுமை. பாவைவிளக்கு கந்திற்பாவை முதலிய பெயர்களையும் நோக்குக.

சிற்பம் படிமைக்கலை முதலியவற்றாலும், நாடகவரங்கின் எழினியாலும் ஓவியநூலும்(Drawing) பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமை சொல்லாமே யுணரப்படும். சிற்பநூல் ஓவிய நூல் என்று இருநூல்கள் கடைக்கழகக் காலத்திலிருந்தனவாக, அடியார்க்கு நல்லார் அரங்கேற்று காதையுரையிற் குறிப்பிடுகின்றார்.

உழவு— (Agriculture)

உழவு பண்டைத் தமிழர்க்குத் தெரிந்திருந்தமையை ஒருவரும் ஐயுறார். ஆயினும், அதைப்பற்றிய சில குறிப்புகள் அறியத்தக்கன.

“ஏரோர் களவழி” என்பது தொல்காப்பியம்(புறத். 16). Agriculture என்னும் ஆங்கிலப்பெயர் தமிழ் மூலத்ததாகவே தெரிகின்றது.

Agriculture, L, agricultura — ager, a field, cultura, cultivation — colo, to cultivate.

அகரம் மருதநிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருதநிலத்தில் தங்கினதினாலேயே, அவர் குடியிருப்பு அக்கிரகாரம் எனப்பட்டது. அக்கிர + அகரம் = அக்கிரா கரம்.


  1. 1.சிலப்.பக்.413-415