பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“எகிபதியக் கல்லறைகளில் நீலமும் (indigo), மஸ்லினும் கண்டது, இந்திய விளைபொருள்கள் குறைந்தது கிறித்து வுக்கு 1700 ஆண்டுகட்கு முற்பட்ட பழைமையில் எகிப்திற் குள் புகுந்தமையைத் திட்டமாய்க் காட்டிவிட்டது. சுமேரியர் இந்தியாவிற்கேயுரிய பொருள்களாகிய தேக்கு, மஸ்லின் வணிகம் செய்தார்கள் என்பதற்கும் சான்றுளது” என்று திருவாளர் ஏ. கோஸ் (Ghose) ஒரு கட்டுரையிற் கூறுகின்றார்.

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முன்னிருந்த சாலோமோனுக்கு முந்திய சான்றுகளிருப்பதால், அவன் இந்தியாவோடு செய்த வாணிகத்தின் வாயிலாய், எபிரேய மறைக்குள் புகுந்த துகி (தோகை = மயில்), கபி (கப்பி = குரங்கு) என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாட்டொடு பண்டு செய்துவந்த வணிகத்திற்குச் சிறப்புடைச் சான்றாகா.

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை” என்று தொல் காப்பியத்திற் (அகத். 37) கூறியிருப்பதால், கி.மு. 2000 ஆண்டுகட்கு முன்பே, தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந் தமையறியப்படும்.

தமிழில் பலவகை மரக்கலங்கட்கும் பெயருள்ளன. அவை புணை, பரிசல், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலியன.

“கலஞ்செய் கம்மியர்” “கலம்புணர் கம்மியர்” என்று மணிமேகலையிலும்,

“நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்பரப்பவு
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போர்”
(பட்டினப். 1130-7)

என்றும்,

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்”

என்று பட்டினப்பாலையிலும்,

The Madras mail dated 2nd Dec. 1915