பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௫௯

ஒப்பியன் மொழிநூல்

பெயரில் நகரமெய் நீங்கிற்று. ஒ.நோ: நாரந்தம் — naranj (Pers.) — arancio (Fr.—It.); E. orange.

கவடி - cowry. கவடி - (பலகறை) ஒரு கடற்பொருள்.

பண்டைத் தமிழர் வாரித்துறையிற் சிறந்திருந்ததினால், வையகம் வட்டவடிவமென் றறிந்திருந்ததாகத் தெரிகின்றது.

மண் + தலம் = மண்டலம் (பூமி) - மண்டிலம் = வட்டம்.

மாநிலத்திற்கு ஞாலம் என்னும் பெயர் வானநூலறி வாலிட்ட பெயராகத் தெரிகின்றது. வாரித்துறையில் சிறந்தவர்க்கு வான நூலும் தெரிந்திருக்கும். வானச்சுடர்களே மீகாமர்க்கு வழிகாட்டிகளும் கடிகாரமும். இதை மாக்ஸ் முல்லரும் கூறுகின்றார்.

நாலம் — ஞாலம் = உலகம். நால் + அம் = நாலம். நாலுதல் தொங்குதல். வானத்திலுள்ள சுடர்கள் தாங்கலின்றித் தொங்கிக் கொண்டிருப்பதை யறிந்த தமிழர், மாநிலமும் அங்ஙனமே தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்திருக்க வேண்டும். மற்றப்படி,

“அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம்
.......நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இன்னுழை கதிரின் துன்னணுப் புரைய
சிறிய வாகப் பெரியோன்” [1]

என்ற கருத்து முன்னோர்க்குத் தோன்றியிராது.

ந—ஞ, போலி. கா : நயம் — ஞயம், நண்டு — ஞண்டு.

உலகத்திற்கு அண்டம் (முட்டை) என்னும் பெயரும், வான்சுடர் வடிவுபற்றி வந்ததே. அண்டங்களையெல்லாம் தன்னுளடக்கிய வெளியும் பிற்காலத்தில் அண்டமெனப் பட்டது, எப்புறமும் வளைந்து தோன்றுதலின்.

அம்பு, ஆழி என்னும் கடற்பெயர்கள் வட்டம் என்னும் பொருள் பெற்றதும், பண்டைத்தமிழரின் வாரித் துறைத் தேர்ச்சியைக் காட்டுவதாகும்.

அம், ஆம், அம்பு என்பன நீரைக் குறிக்கும் தனித் தமிழ்ப் பெயர்கள். அம் — அம்பு. ஒ.நோ : கும்—கும்பு, திரும்—திரும்பு.


  1. 1.திருவாசகம்.திருவண்டப்பகுதி