பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪௪

ஒப்பியன் மொழிநூல்

ஏ — எ. கா: எது, எவன், என். ஏ — யா. கா: யாது, யாவன், யார்.

ஏகாரத்தின் திரிபே யா என்பது. இதனாலேயே தொல்காப்பியர் யாவை வினாவெழுத்தாகக் கூறவில்லை.

ஒ.நோ: ஏன் — யான், (ஏனை) — யானை. ஏனம் = கருப்பு, பன்றி. ஏழ் — யாழ்.

ஈற்றில் வரும் ஆ வினா சேய்மைபற்றியதாகும். சேய்மையும் உயரத்திற்கினமான பண்பாதலையும், ஆன் ஓன் என்னும் இருவடிவிலும் ஆண்பாலீறு வழங்குவதையும், ஈரெழுத்தும் ஏறத்தாழ ஒரே முயற்சியால் பிறப்பதையும் நோக்கியுணர்க.

ஆ வினா முதலில் வராது. ஆர் என்பது யார் என்பதன் மரூஉ.

தமிழிலுள்ள ஆ, ஈ, ஊ, ஓ, ஏ என்ற ஐந்தெழுத்துகளே, சுட்டும் வினாவும் உயரமும்பற்றிய ஆரியச்சொற்களுள் பெரும்பாலனவற்றிற்கு வேர் என்பது, இந்நூலின் மூன்றாம் மடலத்தில் விளக்கப்படும்.

சுட்டு வினாவடிகள் ஆரிய மொழிகளிற் சொற்களாயும், அவற்றுள்ளும் சில எழுத்து மாறியு மிருக்கின்றன. தமிழிலோ அவை எழுத்துகளாயும், ஓரிடத்திலும் பிறழாமலும் இருக்கின்றன. கா: வடமொழியில்,

பிறழ்ந்தவைபிறழாதவை

அத்ய = இன்றைக்குஇ(த்)தி = இப்படி

அத்ர = இங்கேஇத்தம் = இவ்வாறு, E. item.

இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப் படியே யிருத்தல் காண்க.

(4) சொற்கள் தோன்றிய பிறவகைகள்

சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு.

ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை.

எழுத்துத்திரிபு : புழலை — புடலை, பெள் — பெண்