பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௫௮

ஒப்பியன் மொழி நூல்

மேலும், செய்யுட்கே யுரியதும் செய்யுட்கும் உரை நடைக்கும் பொதுவானதுமெனச் செய்யுட்சொல் இருவகை. அவற்றுள், செய்யுட்கேயுரிய சொல்லே உரிச்சொல்லெனப் படுவது என்பதைக் குறித்தற்கே, வெளிப்படு சொல்லைச் சொல்லென்றும் வெளிப்படாச் சொல்லை உரிச்சொல்லென்றும் தொல்காப்பியர் குறித்ததூஉமென்க.

மேலும், உரிச்சொற்பெயர் ஒரு சொல்லை மட்டுமன்று. அது செய்யுளில் சிறப்பாக ஒரு பொருளில் வழங்கற்பாட்டையும் பொறுத்தது.

செல்லல் என்பது போதலைக் குறிப்பின் தொழிற்பெயர்; பிறரிடம் போயிரக்கும் வழமையாகிய இன்னாமையைக் குறிப்பின் உரிச்சொல், வாள் என்பது கருவியைக் குறிப்பின் பெயர்ச்சொல் ; அதன் ஒளியைக் குறிப்பின் உரிச்சொல். இங்ஙனமே பிறவும்.

சுதழ் துனை போன்ற சொற்கள், உலக வழக்கில் வழங் காமையால், எல்லாப் பொருளிலும் உரிச்சொல்லாகும்.

இங்ஙனம், சொல்லே உரிச்சொல்லாவதும், ஒவ்வொரு பொருளில் மட்டும் உரிச்சொல்லாவதுமென, உரிச்சொல் இருவகை.

பழுது முழுது முதலிய சொற்கள், இக்காலத்தில் வெளிப் படையாயினும், தொல்காப்பியர் காலத்தில், அல்லது அவர்க்கு முன்னொரு காலத்தில், வெளிப்படையல்லாதிருந்ததிருக்க வேண்டும். மறை வெளிப்படையாவதும் வெளிப்படை மறையாவதும் சொற்கட்கியல்பே

(2) ம. தட, கய முதலிய சொற்கள் அகரவீறாயிருப்பதால் அஃது ஒரு தனிச் சொல் 'கையைக்குறிக்கும் என்பது.

ம. ம : தொல்காப்பியர் ஓர் இலக்கணியேயன்றி மொழி நூற் புலவரல்லர். ஆகையால் சில சொற்களை ஈறு நீக்கிப் புணர் நிலை வடிவிற் குறிப்பர்; மத என்று ஓர் உரிச் சொல்லைக் குறித்துள்ளார். அது மதம் மதன் என்று வழங்குதல் காண்க. இங்ஙனமே பிறவும் என்பது.

சொற்கள் சொல்லியல் முறையில், இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என, நால்வகையாக வகுக்கப்படும்.