பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௬௭

தலம் என்னும் பெயர் ஸ்தலம் என்பதின் திரிபாகக்கருதப் படுகிறது. ஸ்தலம் என்பதற்கு ஸ்தா (நில்) என்பது வேர், இது ஆரிய மொழிகள் எல்லாவற்றிலுமிருக்கின்றது. State, Station, stand, steady, establish முதலிய சொற்கட்கெல்லாம் sta என் பதே வேர். ஆனால், இதனால் மட்டும் அதை ஆரியத்திற்தே யுரிய சொல்லாய்க் கொள்ள முடியாது; தா (கொடு) என்னுஞ் சொல்லை நினைத்துக் கொள்க.

காலுக்குத் தாள் என்று ஒரு தனித் தமிழ்ச்சொல் உளது. அதற்குத் தா என்பது தான் வேராயிருக்கவேண்டும். தாவு என்னுஞ் சொல், இடப் பொருளில் தென்னாட்டில், சிறப்பாய்க் கல்லா மக்களிடை வழங்குகின்றது. தாள் என்னுஞ் சொற் போன்றே, தா என்னுஞ் சொல்லும் முயற்சியென்னும் பொருளில் நூல்வழக்கில் வழங்குகின்றது

"தாவே வலியும் வருத்தமும் ஆகும்" (உரி. 48.)

என்றார் தொல்காப்பியர், வலி = வன்மை. வருத்தம்= முயற்சி தாளம், தாளி (கள்னி), தாண்டு, தாவு, தாழ், தங்கு, தக்கு, தாங்கு, தளம், தளர் முதலிய பல சொற்கள் தா என்னும் வேரினின்று பிறந்தவையே. ஆகையால், குமரிநாட்டில், தா என்னும் வேர்ச்சொல் நில் என்னும் பொருளில் தமிழில் வழங்கி யிருக்கவேண்டும். தளம்- தலம். ஆராயப்படா மையாலும் வேர் வழக்கற்றதினாலுமே இச்சொல் வடசொல்லாகத் தோன்றுகின்றது. தலம்—ஸ்தலம் (மூன்மெய்ச்சேர்பு:)

உலகம் : உல—உலகு —உலகம்: உலத்தல் அழிதல், உலப்பது உலகம். இங்ஙனமே பிற இடப்பெயர்களும் ஒவ்வொரு காரணம் பற்றியனவயேயாகும். உலகம்-லோக(வ.)

சினைப்பெயர் :

சில்—சில்லை—(சின்னை )—சினை—துண்டு , பிரிவு, உறுப்பு:

சில சினைப்பெயர்கள் இடப்பொருளை முதலாவது பெற்றுப் பின்பு பல சொற்களைப் பிறப்பித்திருக்கின்றன;

கா : கண் — நகக்கண், சல்லடைக்கண், ஊற்றுக்கண் (இடம்);

அலக்கண், இடுக்கண், பழங்கண் (துன்பம்);

உறுகண், தறுகண் (பண்பு )