பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௨

ஒப்பியன் மொழி நூல்

என்னுஞ்சொல் வழங்கினதினால், யாழ் யாளியின் தலை வடிவைக் கடையிற்கொண்டதென்ற காரணம்பற்றி, அதை யாளி என்னுஞ் சொல்லின் திரிபாகக்கூற முடியாது. யாழின் கடையிலிருப்பது சரியான யாளிவடிவமுமன்று.

கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை, யெழுப்புதல் எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ், ஏழ்= இசை. இசைச்சுரங்கள் ஏழு. "ஏழிசைச் சூழல்", 'ஏழிசை வல்லபி' என்னும் வழக்குகளை நோக்குக. ஏழ் என்னும் இசையின் பெயர், அதன் சுரத் தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.

எட்டு : எண்+து = எட்டு.

எண் = எள், இப்பெயர் ஆகுபெயராய் உணவைக் குறிப்பின், கூலத்தின் தொகைபற்றியதாகும் ; என்ளைக் குறிப்பின், அதன் காயிலுள்ள பக்கங்களின் தொகைபற்றிய தாயிருக்கலாம்.

நெல், புல் (கம்பு), சோளம், வரகு, தினை, சாமை, குதிரைவாலி, காடைக்கண்ணிஎன்ற எட்டே முதலாவது எண் கூலமென்று கொள்ளப்பட்டவை. கேழ்வரகு வரகின் வகையாயடங்கும். எண் என்னும் உணவுப்பொருள் அல்லது கூலம் எட்டுவகையாயிருத்தலின், அதன் பெயர் எட்டாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டிருக்கலாம்;

தொண்டு : தொள்+து = தொண்டு, தொள் = தொளை.

உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது,

தொண்டு — தொண்டி தொளை.

ஓ. நோ, தொண்டை (throat) = தொளையுள்ளது.

பஃது : பல்+து = பஃது. ஓ. நோ. அல்+து = அஃது.

பல்=பல, முதன் முதலாய்த் தமிழர்க்கு எண்ணத்தெரிந்தது பத்துவரைக்குந்தான். கைவிரல் வைத்தெண்ணியதே இதற்குக் காரணம். இரு கைவிரல் பத்து. பத்து கடைசி யெண்ணாயிருந்தமையின், அதைப் பலவென்னுஞ்சொல்லா லேயே குறித்திருக்கலாம். இது பல் என்னும் உறுப்புப் பெயரின் திரிபு. 12ஆம் , அல்லது 13-ஆம் மாதத்தில்,