பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

முன்னுரை

கட்கும், முத்திரைகளிலுள்ள ஓவிய வெட்டுகட்கும், அக்காலத்து மற்ற நாடுகளில் நமக்குத் தெரிந்ததொன்றும் மாதிரியில் ஒத்ததாயில்லை. அம் முத்திரைகளிற் சிறந்தவை, கவனிக்கத் தக்கபடி, திமிலும் குறுங்கொம்புங் கொண்ட காளைகளாகும். அவை வேலைப்பாட்டின் விரிவினாலும், இதுவரை வெட்டோவியக் கலையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படாத உண்மையுருவப் படிவ உணர்ச்சியினாலும், பிறவற்றினின்றும் விதப்பிக்கப் பெற்றவை. அதுவுமன்றி, ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்டுப் பத்தாம் பதினொராம் தட்டுகளிற் பொறிக்கப்பட்டுள்ள இரு தலைமையான சிறு சிலைகளின் இனிய குழைவுப்படி நிலைக்கு, கிரேக்க நாட்டு இலக்கியகாலம்வரை ஒன்றும் இணையாக முடியாது.

“சிந்து மக்களின் மதத்திலும், பிறநாட்டு மதங்களிலும் பல செய்திகள் ஒத்துத்தானிருக்கின்றன. ஆனால், மொத்தத்தில் பார்க்கும்போது, சிந்து நாட்டுமதம் இன்றும் வழங்கி வரும் இந்து மதத்தினின்றும், குறைந்தபக்கம், இன்றும் பெரும்பான் மக்கள் வழிபடும் இரு மாபெருந் தெய்வங்களாகிய சிவ சிலைகளின் வணக்கமும், ஆன்மியமும் (Animism) கலந்த அம் மதக் கூற்றினின்றும் பிரித்தற் கரிதாமாறு அத்துணை இந்தியத் தன்மை வாய்ந்துள்ளது.”

“கூலங்களை அரைப்பதற்குச் சப்பைக்கல்லும், சேணக் கல்லும்தான் மக்கட்கிருந்தன; வட்டத் திரிகல் இல்லை.”

“இங்ஙனம் சுருங்கக்கூறிய அளவில், சிந்து நாகரிகம் தன் பொதுக்கூறுகளில் மேலையாசியாவிற்கும், எகிப்திற்கும் உரிய சுண்ணக் கற்கால நாகரிகங்களை ஒத்திருக்கின்றது; பிற செய்திகளில், மெசொப்பொத்தாமியாவிற்குச் சுமேரிய நாகரிகமும், நீலாற்றுப் பள்ளத்தாக்கிற்கு எகிப்திய நாகரிகமும் போல, சிந்து, பஞ்சாப் நாடுகட்கே யுரியதாய்த் தனிப்பட்ட முறையாயுளது. இதை விளக்க இரண்டொரு முக்கியச் செய்திகள் கூறுவோம். நெசவுக்குப் பருத்திப் பஞ்சைப் பயன்படுத்துவது அக்காலத்தில் முற்றிலும் இந்தியாவிற்கே உரியதாயிருந்தது. இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகட்குப் பிறகுதான் மேலையுலகத்தில் அவ் வழக்கம் பரவினது. இஃதன்றி, சரித்திரத்திற்கு முற்பட்ட எகிப்திலாவது, மேலை யாசியாவில் உள்ள மெசொப் பொத்தாமியாவிலாவது, பிறவிடத்திலாவது, நமக்குத் தெரிந்தவற்றுள் ஒன்றும், மோஹென்ஜோ-டேரோ வாழ்நரின் நன்றாய்க் கட்டப்பெற்ற குளிப்பகங்கட்கும் இடஞ்சான்ற வீடுகட்கும் ஒப்பிடுவதற்கில்லை.