பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

முன்னுரை

அவை எல்லார்க்கும் எக்காலத்தும் ஏற்காமையின், பலர் அரச ருக்குப் பாங்கராயமர நேர்ந்தது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில், இப் பொழுதையினும் வெண்ணிறமாயிருந்ததி னால் அரசர்க்கு அவர்மீது விருப்பமுண்டாயிற்று.

களவிற் கூற்றிற்குரியாரைப்பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ்விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன் முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது.

இனி, பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பானென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பானென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் 'வேளாப் பார்ப்பான்' (அகம். 24) என்று கூறப்படுவன்.

பார்ப்பனர் ஆரிய வேதத்தைத் தமிழர்க்கு மறைத்து வைத்ததினாலும், அவ்வேதத்தை ஓதி, ஓதுவிப்பார்க்குப் போதிய ஊதியம் தரத்தக்க அளவு பெருந்தொகையினராய் அக்காலத்துப் பார்ப்பனர் இன்மையாலும், ஆரிய வேள்வி தமிழர் மதத்திற்கு மாறானதினாலும், முதன் முதலாய் வந்த பார்ப்பனர் பாங்கத் தொழிலே மேற்கொண்டனர் என்பது தெளிவு.

இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைக் காலத்தினரான தொல்காப்பியர் காலத்திலன்றிக் கடைக் கழகக் காலத்திலும் பார்ப்பனர் பாங்கத்தொழில் செய்தமை, கீழ் வருங் குறுந்தொகைச் செய்யுளால் அறியப்படும்.

குறிஞ்சி, 156

(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது.)

“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
யெழுதாக் கற்பி னின்செய லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே”

(இது, கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.)