பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை

29

கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை

கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும்.

“சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது.............................”

என்று சிலப்பதிகாரம் (1 : 51-3) கூறுதல் காண்க.

கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமை பூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமா யிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டுவந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்”

என்னும் (புறநானூற்று (9 : 1-5)அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்கவரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17-ஆம் நூற்றாண்டில்,வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சிதரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார்.

“ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள”

எனவரும் அடிகளும் (புறம். 34: 1-4) மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத்தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி