பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

முன்னுரை

அமைச்சருக்குப் போர்த் தொழிலும் தெரிந்திருக்கவேண்டும் என்றும், ஆரியர் நடுவுநிலை திறம்பியவர் என்றும், தமிழரசர் கருதியிருந்ததால் பார்ப்பனரை அமைச்சராக அமர்த்தவில்லை.

செல்வக் கடுங்கோ வாழியாதன் “தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்து” என்றும், குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை “தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப்பண்ணி” என்றும் பதிற்றுப்பத்தில் வந்திருத்தலும், மனுநீதிச்சோழன் தன் அமைச்சர் கூறிய மனுநீதியை ஒப்புக் கொள்ளாததும் நோக்கியுணர்க.

(5) ஆள்வோன்

இதுகாலை பார்ப்பனர் ஆள்வோர் நிலையும் அடைந்திருக்கின்றனர்.

இவ் வைவகை நிலையும் வரவர ஒவ்வொன்றாய்க் கூடினவையே யன்றி ஒரே நிலையின் திரிபல்ல.

இங்ஙனம் பார்ப்பனர் ஐவகைநிலையடைந்தாலும், இவை அவருள் தலைமையானவரும் சிலரும் அடைந்தவையேயன்றி, எல்லாரும் அடைந்தவையல்ல. இங்ஙனம் அடையாதவரெல்லாம் தொன்றுதொட்டு 18ஆம் நூற்றாண்டுவரை இரந்துண்டே காலங்கழித்திருக்கின்றனர்.

இதை, “முட்டிபுகும் பார்ப்பார்” என்ற கம்பர் கூற்றும்,

“பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்...
இரந்தூண் தலைக்கொண்டிந்நகர் மருங்கிற்
பரந்துபடு மனைதொறுந் திரிவோன்”

என்னும் (மணிமே. 5:33 46) அடிகளும், கூரத்தாழ்வான், இராமப் பிரமம் (தியாக ராஜ ஐயரின் தந்தை) முதலியவர் உஞ்சவிருத்தி என்னும் அரிசியிரப்பெடுத்தமையும், சில குறிப்புகளும் தெரிவிக்கும்.

பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டுவழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் 'வேதியரை வினவல்' என்னுந்துறையும் “ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர் வழியே போனான் பார்ப்பான்”, “பார்ப்பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை” என்னும் பழமொழிகளும் உணர்த்தும்.