பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

ஒரு நாட்டின் சிறப்பு அந்நாட்டின் மொழி வளத்தைப் பொறுத்தே அமைவதாகும். மொழி, வளமுடையதாயின் அதனைப் பேசும் மக்கள், நாகரிகமும் நல்ல பண்பாடும் உடையவர்களாய்த் திகழ்வர் என்பது தேற்றம். அவ்வகையில் நந் தமிழ் மொழி தன்னேரில்லாத் தனித்தன்மை வாய்ந்தது. அதனைப் பேசும் இத்தமிழக மாந்தர் தம் நாகரிகம், தனித் தன்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது. இது வரலாற்றாசிரியர் அனைவரும் ஒப்ப முடிந்த முடிபாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் நன்மக்கள் முறையாக வளர்ந்தோங்கி வாழ்ந்திருப்பின், இத் தமிழ் நாடு மேலை நாடு கட்கு ஒப்பானதொரு சீரிய நாடாக-உலக அரங்கில் முன்னணி யில் நிற்கக் கூடிய நாடாகத் திகழ்ந்திருக்கக் கூடும். ஆனால் இந்நாட்டில் குடியேறிய ஆரிய இனத்தவரின், சூழ்ச்சிகளாலும், மேலாட்சியினாலும், தமிழினத்தின் வரலாறும், தமிழ்மொழியின் சிறப்பும் புதை பொருளாரய்ச்சிக் குரியனவாய் விட்டன.

இந்திய வரலாறு சரியானபடி எழுதப்பட்டிருப்பின், தமிழகமே அவ்வரலாற்றுக்கு அடிப்படையாக அமைந்து இருக்கும்: வரலாறு குமரி முனையிலிருந்து துவங்கியிருத்தல் வேண்டும். ஆனால், மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் வட நாட்டை மையமாகக் கொண்டே தம் ஆராய்ச்சிகளை இயற்றினர், அதன் விளைவாகத் தமிழகத்தின் தொன்மை வெளியுலகிற்குத் தெரியாமற் போயிற்று. இதனால் இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்க்கு வாழ்வும் தமிழர்க்குத் தாழ்வும் ஏற்படலாயிற்று. தமிழர் தம்மையே மறக்கலாயினர்.

எனவே, இப்படிப்பட்ட நிலை மாறித் தமிழர்க்குப் புது வாழ்வும், புத்துணர்ச்சியும் ஏற்படவேண்டும். அதற்கு வழி