பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

முன்னுரை

பிரிவுகளே கூறப்பட்டன. இப் பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தா மலுமிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணருமல்லர், அரசருமல்லர், வணிகருமல்லர், வேளாளருமல்லர்.

அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை,

“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”

“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”

என்னும் நூற்பாக்களான் (76, 77) உணர்க.

"வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” (௸ ,73)

என்னும் நூற்பாவில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை (சக்கரம்) யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தாசலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடையதென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது.

முனிவரைக் [1]கடவுள்1ரென்றும், [2]பகவரென்றும், கடவு ளோடொப்பக்[3]கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்டபின், தமிழர் தங்களைச்சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்து விட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது.


  1. * “தொன்முது கடவுட் பின்னர் மேக” (மதுரைக். 41)
  2. 1. பகவரைக் காணின் (திருவாய்.)
  3. 2. இக்காலத்தும், 'His Holiness' என்று போப்பையும், 'His Grace' என்று அரசக் கண்காணியாரையும் மேனாட்டாரும் அழைத்து வருதல் தமிழக வழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது.