பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பார்,ஐயர்,அந்தணர் என்னும் பெயர்கள்

37

ஆரியருள், முனிவர் போன்றவர் அந்தணர் என்றும், பிறரெல்லாம் பார்ப்பாரென்றுங் கூறப்பட்டனர்.ஆரிய முனிவரை, வீரமாமுனிவர் (Beschi), தத்துவபோதக சுவாமி (Robert de Nobili) என்னும் மேனாட்டாருடன் ஒப்பிடுக.

தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லையென்பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர்.[1]'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று தொல் காப்பியத்திலும், வேளாப் பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்னும் நூற்பாவில்,

“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”

என்று சித்தரும்,

“நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்”

என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க்கொப் பவே எண்ணப்பட்டதை அறியலாம்.

பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி, அவர் தமிழரே என்னுங் கருத்துப்பற்றி யன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக் குறிப்பின், ஐரோப்பியரும், சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க.

மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் முதன்முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளே யன்றிப் பிற்காலத்துத் தோன்றிய பல சிறுசிறு குலங்களல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும்


  1. * தொல். பொருள். 74.