பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியத்தால் தமிழர் கெட்டமை

57

ஜீனி ஜோர் ஷரா ஷோக்
ஜெண்டா ஷர்பத் ஷராய் ஹுக்கா
ஜேப்பு ஷரத்து ஷராப்பு ஹோதா

(இவற்றுட் சில, உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.)

மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூற வேண்டுவதில்லை.

தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச்சொற்கள் கலந்துள்ளன.

எ - டு : காங்கிரஸ் (இங்கிலீஷ்), மகாத்மா, சத்தியாக் கிரகம், வந்தேமாதரம், பாரதமாதா, ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரபாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை.

இங்ஙனம் பற்பல மொழிகளினின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது. தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழி யுணர்ச்சியில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வயமில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது.

(2) பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல்.

பன்னீருயிரும் முதலாறுமெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்;

பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்;

கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும்.

(3). தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துக்கள் தமிழ் நூல்களிற் கலத்தல்.