பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

முன்னுரை

வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல்.

இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடுநிலை அறிஞர் அறிந்துகொள்க.

ஆரியத்தால் தமிழர் கெட்டமை

பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக்கல்வியும் நாகரிகமுமின்மை, தாய் மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன, ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் பலவகையிலும் கெட்டு வந்ததை நோக்குமிடத்து, 'தமிழர்கேடு — பார்ப்பனர் ஆக்கம்' என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.

பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப் புலவர் பிழைப்பும் கெட்டன.

தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக் குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிராகர வழியாகச் செல்லக் கூடாதென்றும், மேலாடையணியக்கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகின்றது. மேல் வகுப்பாரைக் கண்டவுடன் ஐம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல்வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்?

பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டார்க்குச் சமையல் செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.

ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்

ஆரியதமிழப் போர் இந்தியர்க்குள், முக்கியமாய்த் தமிழர்க்குள் பிரிவினையுண்டாக்குமாறு ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்ட தென்றும், அடிமைத் தமிழரான நீதிக் கட்சியார் அதைக் கடைப்பிடித்து வருகின்றனரென்றும், ஒரு சாரார் கூறி வருகின்றனர்.