பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

முன்னுரை

தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயறப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவராயிருந்ததினாலும், எழுத்தாணியால் ஓலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்து விடுமாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ் செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக்காலத்திற்கேற்றபடி மிக விரிவான இலக்கணம் எழுதப்படவில்லை. வட மொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவாயுள்ளது. ஆங்கில விலக்கணம் வடமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாகவுள்ளது.

தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார். அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வட மொழியிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாத தென்று கூறுகின்றனர்.

ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப் பட்டதாயிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும்.

உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம்.

(1) அசையழுத்தம் (Accent)

அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர்.

எடுப்பு (Acute), படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளனவென்று நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை.

தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலி லிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க.