பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

திரும்பி வந்தார்கள். இப்படி அறுபது பேரும் போய் வந்துவிட்டார்கள். இருப்புச் சட்டி கூச்சல் போடவும் இல்லை. எழுந்து குதிக்கவும் இல்லை. நிமிர்ந்து நிற்கவும் இல்லை.

அரசன் பூவேந்தனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அறிவாளன் என்ற இந்தக் குடியானவன் புரட்டுக்காரன் என்று முடிவு செய்தான்.

"மாயமாவது மந்திரமாவது? எல்லாம் பித்தலாட்டம்" என்று கூச்சலிட்டான்.

அறிவாளன், அரசன் எதிரில் வந்தான்.

"அவசரப்படாதீர்கள் அரசே! இதோ ஒரு நொடியில் திருடன் அகப்படப்போகிறான், பாருங்கள்!" என்றான்.

அறுபது வேலையாட்களையும் மீண்டும் வரிசையாக நிற்கச் சொன்னான்.

"எல்லோரும் இருப்புச் சட்டியைத் தொட்டீர்கள் அல்லவா? கையை நீட்டுங்கள்" என்றான்.

எல்லோரும் கையை நீட்டினார்கள். அறிவாளன் ஒவ்வொருவர் கையாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.

வரிசையில் நின்ற ஒருவரைப் பிடித்து இழுத்தான். அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.