பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54

அவர்கள் வீட்டின் அருகில் இரண்டு மூன்று பண்படுத்தப்பட்ட நெல் வயல்கள் இருந்தன. அவற்றையும் அந்தச் சிற்றோடை வளப்படுத்தியது. இந்த நிலங்களும், ஒரு வாழைத் தோட்டமும், வட்டமான உச்சியையுடைய மாமரம் ஓன்றும், அவர்கள் வளர்த்து வந்த கோழிகளும் வாத்துக்களும், அந்த உழவர் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்துவதற்கு உதவியாக இருந்தன. அந்த உழவன் அந்தக் காட்டுப் புறத்தில் கிடைத்த பொருள்களைக் கொண்டு தன் திறமையால் ஒரு மீன் பிடிக்கும் கூடையைச் செய்தான். அதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏராளமான மீன்களைப் பிடித்து வந்தான்.

இப்படியான எளிய வாழ்க்கையில் எவ்விதமான குறைவுமின்றி அந்த உழவனும் அவன் மனைவியும் பல நாட்களைக் கடத்தி வந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு மகனும், அவன் பிறந்த இரண்டாண்டு கழித்து ஒரு பெண்ணும் பிறந்தார்கள். இரண்டு குழந்தைகளும் இலையுதிர் காலத்திலேயே அந்தக் காலத்தின் பருவம் முழுத்தன்மையோடு விளங்குகிற மையக் கட்டத்திலேயே பிறந்தார்கள்.

காட்டுப் புறத்தின் அமைதியான சூழ்நிலையில் அந்தக் குழந்தைகள் வளர்ந்து வந்தார்கள். அவர்கள் சில சமயம் தங்கள் தந்தையுடன் மலையடிவாரத்திற்கோ கடலுக்கோ செல்லுவார்கள். அப்போதெல்லாம் அந்தக் கடல் தங்கள் வாழ்க்கையில் விளையாடப் போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது.