பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

61 |  வெள்ளியங்காட்டான் 

உன் அன்னை உயிருடன் இருந்த காலத்தில் நானும் எல்லாம் உடையவனாகயிருந்தேன். அவளை இழந்த அன்றே என்னுடையதாக இருந்த அனைத்தையும் நான் இழந்துவிட்டிருக்கிறேன். சற்று ஏறக்குறைய இடையில் கழித்த பத்தாண்டுகளில் எனக்கிருந்த கடமை உணர்ச்சியில் இதை நான் மறந்துவிட்டேன் போலும். என் உள்ளம் ஒரு காலியான பெட்டி; அதில் ஒன்றும் கிடையாது என்பதை இப்பொழுது தான் அறிகிறேன். ஆகவே, என் வரையில் ராபர்ட் பிரெனிங்கின் இந்தப் பொன்மொழி ஒரு வெற்றுச் சொல்லே. என் வீழ்ச்சி திரும்ப எழுவதற்கானதும் அன்று; என் தோல்வி திரும்ப வெல்வதற்கானதும் அன்று; என் துரக்கம் திரும்ப விழிப்பதற்கானதும் அன்று. என் வாழ்வின் நியதியான முன்னேற்றமும் அன்றோடு முடிந்துவிட்டது. ஆயினும், நான் இன்னமும் இருக்கிறேன். வெறுமையான உள்ளத்துடனும்; செயலற்ற சிந்தனையுடனும் வீணாக இருக்கிறேன். ஆனால், நான் இந்த உலகத்தில் எதற்காக இன்னும் உயிருடன் இருக்கிறேன்? யாருக்காக இருக்கிறேன்? இந்த இரண்டு கேள்விகளும் ஒவ்வொரு நாளும் வந்து என்னைத் துளைத்தெடுக்கின்றன. இவற்றிற்கு விடைகாணவும் அசக்தனாக இருக்கிறேன். கடந்த மூன்று மாத காலம் உனக்கு என் கைப்படக் கடிதம் எழுதவில்லை. இன்றும் எழுத வேண்டாமென்றுதான் இருந்தேன். அக்காவை பதில் எழுதிவிடும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அக்கா மறுத்து விட்டாள். ஆகவே நானே எழுத வேண்டியதாயிற்று. இந்தக் கடிதம் எழுதத் தொடங்கியபோது ஒருவிதமான எண்ணம் என் மனதில் உதித்தது. ஒரு விதத்தில் என் கேள்விக்கு அதுவே விடையாக இருக்குமோ? நான் இன்னும் வாழ்வது உங்களுக்குக் கடிதங்கள் எழுதுவதற்காகவே என்பதுதான் அந்த எண்ணம். இது எந்த அளவில் சரியான விடையாகும்?