பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அய்யாவை மீட்டு...

97



"என்ன ஸார். அவள் சின்னப்பிள்ள மாதிரி பேசுறா. நீங்களும் சின்னப் பிள்ள மாதிரி சும்மா கேட்டுக்கிட்டு இருக்கீங்க?"

சப் இன்ஸ்பெக்டர் கோபத்தோடு எழுந்தார்.

"எதுய்யா சின்னப் பிள்ளத்தனம்? வயசான மனுஷன கோட்டுக்குள்ள அடைக்கது பெரிய மனுஷத்தனமோ? இந்தாய்யா, லாக்கப்பத் திற. இவர இதுக்குள்ள அடச்சி வைக்கலாம். அப்பதான் இவருக்கு பிறத்தியாரோட கஷ்டந் தெரியும். போய்யா உள்ள, நீ யாராய் இருந்தாலும் எனக்குக் கவல இல்லை. இப்ப நான் போலீஸ்காரன். நீ ஒரு கிரிமினல் குற்றவாளி. போய்யா உள்ள இல்ல. கழுத்தப் பிடிச்சித் தள்ளணுமா?"

ஆடு கோழிகளைக் கொடுத்தே அதிகாரிகளைச் 'சரிக்கட்டிப்' பழகிப்போன மாரிமுத்து நாடார், அறுக்கப்படப் போகும் ஆடு மாதிரி, விழித்தார். அவருக்கு, சப் இன்ஸ்பெக்டர் திட்டியதைவிட, அவர் திட்டுவது உலகம்மைக்கும் தெரிகிறதே என்றுதான் அதிக வருத்தம்.

சப் இன்ஸ்பெக்டர், கோபந்தணிந்தவர் போல், நாற்காலியில் உட்கார்ந்தார். மாரிமுத்து, லாக்கப் அறைக்குப் போகாமலும், வெளியே நிற்காமலும் நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசலில் நின்றார். இதுவரை இந்த வயது வரைக்கும், இப்படி நடத்தப்படாத தன்னை, 'ஒரு சின்னப்பய மவன் சின்னத்தனமா நடத்துறதில அவருக்கு ஏகப்பட்ட கஷ்டந்தான்.

சப் இன்ஸ்பெக்டர் அவரைப் பார்த்துக் கூப்பிட்டார்.

"நாடாரே, இங்க வாருமய்யா."

நாடார் வந்தார்.

"அந்த ஆளப்பாத்தா ஓமக்குப் பாவமா இல்ல? வயசான மனுஷன இப்படிப் பண்ணலாமா? பேசாதேயும். நான் ரகசியமா விசாரிச்சேன். நீரு பண்ணினது தப்பு. நீரு அவர அவமானப் படுத்துனது மாதிரி நான் ஒம்ம அவமானப்படுத்த விரும்பல. ரெண்டு பேரையும் விட்டுடுறேன். சமாதானமாகப் போங்க. இனிமேல் அந்தக் கிழவன் வழிக்கு நீரு போகக் கூடாது. இல்லன்னா அவருக்கு ஆறு வாரமும், ஓமக்கு ஆறு மாசமும் வாங்கித் தர முடியும். என்ன சொல்றீரு?"

மாரிமுத்து நாடார், அப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று நினைத்தார்.