பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

ஒரு கோட்டுக்கு வெளியே ...


தன்னம்பிக்கையும் இல்லாமல் தாழ்வு மனப்பான்மையில் ஊறிப்போய் விடுவார்கள் என்பதும், அவர்கள் வெளிமணம் அந்த பிரத்யட்ச நிலையை ஒப்புக்கொள்ள மறுக்கும் என்பதும். அடி மனதில் அடிவாங்கிப் பழகிப்போன அவர்கள், வலுவான மனிதர்களோடு, தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டு, தங்களையும் வலுவான மனிதர்களாகக் காட்டிக்கொள்ளும், மனோதத்துவ ரீதியில் சொல்லப்போனால் அடிமை மனோபாவத்திற்கு ‘காம்பென்ஸேஷன்’ தேடிக்கொள்ளும் ‘எஜமானத்துவ’ வகையில் பெரிய இடத்தாரோடு ஒட்டிக்கொண்டு தங்களையும், பெரியவர்களாகக் காட்டிக் கொள்வார்கள் என்பதும் உலகம்மைக்குத் தெரிய நியாயமில்லை. இதை அறியாமலேயே, ‘வெங்கனுக்கு வீம்பு அதிகம்’ என்ற பழமொழியின் உள்ளர்த்த்ம், பலரைப்போல் அவளுக்கும் தெரியாது. தொட்டிலிலேயே ‘ஆனைகட்டிப் போரடிச்சார் உங்களய்யா, கைகட்டி வாய் புதைத்துக் காசினியார் நிற்கையிலே கப்பலுலே வந்திறங்கும் கண்மணியே, தாலேலோ’ என்ற பாட்டைக் கேட்டு, அதற்கேற்ப, ‘சீமைத்துரை’, ‘வெள்ளைத்துரை’, ‘பாண்டியராஜன்’, ராசாக்கண்ணு’ என்று பெற்றோர்களால் பெயர்கள் வைக்கப்பட்டு, அவர்கள் சொன்னபடி நடக்காமல், எதிர்மறையில் நடந்தாலுங்கூட, ஒவ்வொருவனும் தன்னைச் சக்கரவர்த்தியாக ― தன்னையறியாமலே அங்கீகரித்துக்கொண்டு. அப்படிச் ‘சக்கரவர்த்தி’ மாதிரி இருப்பவர்களோடு ஒட்டிக்கொள்வார்கள் என்பதும், இந்த அடிப்படை மனோபாவத்தை உலுக்கித் தள்ளும் வகையில் இலக்கியங்களும், செயல்களும் துவக்கப்படாததுவரை, நிலைமை இப்படியேதான் இருக்கும் என்பதும், ‘உயர்ந்தோர் மாட்டே உலகு’ என்ற அந்த உலகிற்கே இதைச் சரியாகக் கணிக்கத் தெரியாதபோது, உலகம்மைக்குத் தெரிய வேண்டிய நியாயமில்லை. என்றாலும், அவள் உள்ளுணர்வு, ‘பட்டிதொட்டி பதினாறிலும்’ ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை மட்டும் உணர்த்திக் கொண்டிருந்தது.

இதோடு இன்னொரு வேலையும் அவளுக்கு; வீட்டில் பட்டைச்சாராயம் வைக்கப்படுகிறதா என்று அவள் கண்காணிப்பு வேறு செய்ய வேண்டியிருந்தது. தள்ளாமையில் தள்ளாடும் அவள் அய்யாவும், அவள் இல்லாதபோது விழிப்போடு இருக்க வேண்டும் என்கிற நிலை. இந்தச் சமயத்தில், லோகுவின் எண்ணமும், உள்ளத்தில் எட்டிப் பார்ப்பதை அறிந்து, அவள் தன்னைத்தானே நொந்து, தனக்குள்ளேயே எரிச்சல்பட்டுக் கொண்டாள். என்றாலும் அவள் ஒன்றை மட்டும் கைவிடவில்லை.