பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடை விரிந்திட...

161



நம்பிக்கை! நம்பிக்கை!

‘ஊரில் பதட்டநிலை முடிந்ததும். சேரி மக்கள் மீண்டும் ‘வரப் போக’ இருப்பார்கள். இந்தப் பயங்கரத்தனிமை நிரந்தரமாக இருக்காது. சரோஜாவை, தங்கப்பழம் ஒருமாதிரியாக நடத்தினாலும், இப்போது கொஞ்சம் அவன் அன்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது. மாரிமுத்து நாடாருக்கும் கோபம் தணிந்துவிடும். சேரி மக்களைப் பகைக்கக்கூடாது என்பதற்காகவே, ஊர்க்காரர்கள் அவளிடம் குரோதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஒருவேளைக்கு, லோகுவே அவளை வந்து பார்க்கலாம். ஒருவேளை அவன், அவளை’

உலகம்மை மேற்கொண்டும் நினைத்ததைத் தொடராமல் சட்டாம்பட்டி வயக்காட்டுக்குப் புறப்பட்டாள். இப்போது மெட்ராஸுக்குப் போகும் எண்ணமே ஏற்படவில்லை. ‘இந்த ஊர்க்காரன் என்னதான் பண்றான்னு கடைசிவரை பாத்துடலாம்’ என்றே வைராக்கியமும் பிறந்தது. ஊர்க் கொசுவுக்குப் பயந்து, கோட்டை இருக்கும் சென்னைக்குப் போக அவள் விரும்பவில்லை.

உலகம்மை தோட்டச்சுவரில் ஏறிக்குதித்துப் போவதைப் பார்த்துவிட்டு, மாயாண்டி மீண்டும் கட்டிலில் வந்து படுத்தார். அவரையும். தனிமை வாட்டியது. அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்த அருணாசலத்தை, தற்சமயத்துக்கு வரவேண்டாம் என்று அவர்தான் சொல்லியிருந்தார். கலகத்திற்குக் காரணமாகக் கருதப்படும் அவனை, எவனாவது ‘ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிடப்படாது’ என்கிற பயத்தில் சொன்னவர். இப்போது தனிமையே ஒரு பயங்கரமாக வடிவெடுக்க, அதைத் தாங்க மாட்டாது, சேரிக்குப் போகலாம் என்று யோசித்து பின்னர் தோட்டத்துச் சுவரில் ஏற முடியாத இயலாமையை நொந்து கொண்டு கண்ணயர்ந்தார்.

வெளியே சத்தம் கேட்பதைக் கேட்டதும், எவனோ சாராயப் பானையை வைக்க வருவதாக நினைத்துக்கொண்டு. மாயாண்டி வெளியே வந்தார். அவராலேயே நம்ப முடியவில்லை.

தோட்டத்திற்கு உரிமையாளராக இருந்தும், தனக்குத் தானே உரிமையாளராக இருக்க முடியாமல் போன ஐவராஜா. தோட்டச்சுவரை ஒட்டி, நாலைந்து கம்புகளை நட்டுவிட்டு, சுவரில் போடப்பட்டிருந்த முட்கம்பிகளை எடுக்க முடியாமல் எடுத்துக் கொண்டிருந்தார். சில பனைவோலைகளும் சுவரில் கிடந்தன. மாயாண்டிக்கு, “இப்டிச் செய்ய இவனால எப்டி முடிஞ்சுது?” என்று உள்ளத்துக்குள் கேள்வி ஓங்கியது.