பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

ஒரு கோட்டுக்கு வெளியே ...


வேகமாக ஐவராஜாவை நெருங்கினார். ஆனால் ஐவராஜாவால் மாயாண்டியை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. கம்பியை எடுக்கிற சாக்கில், தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

“என்ன மாப்பிள்ள, எதுக்குக் கம்பு நடுறீரு?”

“தோட்டத்த அடைக்கப்போறேன். அடிக்கடி பன்னி வந்து மேஞ்சிட்டுப் போவுது.”

“எந்தப் பன்னிய சொல்றிரு. மனுஷப் பன்னியயா? மிருவப் பன்னியயா?”

ஐவராஜா, அவரை நிமிர்ந்து பார்த்தார். என்ன பதிலளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. மீண்டும் மும்முரமாக வேலையில் இறங்கினார். மாயாண்டி பேசுவது. காதில் நன்றாகத்தான் கேட்டது.

“மாப்பிள. நல்லா யோசிச்சிப்பாரும். மொட்ட மரமா நிக்கறோம். வீட்டச் சுத்தி அடச்சிப்புட்டானுவ. ஒம்ம தோட்டத்தயும் அடச்சுட்டா நாங்க எங்க போவ முடியும்? ஒம்ம தோட்டத்துல குருவி நாயிகூடப் போவுது; நாங்க போவக்கூடாதா? மாப்பிள, மாப்பிள, நீரு செய்யுறது முறயில்ல! மாப்பிள்ள என் மொகத்த ஏறிட்டுப்பாரும்! அதுக்குப் பிறவும் ஒமக்கு அடைக்கணுமுன்னு நெனச்சா அடையும்! ஒம்மத்தான் மாப்பிள்ளை, வீட்டையே ஜெயிலா மாத்திட்டா, நாங்க எங்க போவம்? ஊருக்காரனுகதான் அட்டூழியம் பண்றான்னா நீருமா மாப்பிள்ள? மாட்ட பவுண்டில அடைக்கது மாதிரி எங்கள அடச்சா எப்டி மாப்பிள்ள?”

ஐவராஜா, ‘கண்டுக்காமல்’ முட்கம்பியின் கீழ்முனையை, ஒரு கம்பில் கட்டிக்கொண்டிருந்தார். கிழவர் பேச்சைத் தாங்க முடியாதது போலவும், அது தன் இதயத்தைத் தாக்குவதற்கு முன்பாக, வேலியைப் போட்டு விடுவதென்றும் நினைத்தவர்போல், அவசர அவசரமாக, முட்கம்பியின் மேல் முனையைத் தூக்கி, கம்பின் நுனியில் கட்டிக்கொண்டிருந்தார். அதையே பார்த்துக்கொண்டிருந்த மாயாண்டி, வெளியே போன மகள் உள்ளே வரமுடியாது என்பதை நினைத்ததும், ஒரு குழந்தையாகவும் ஆகிவிட்டார்.

“அய்வராசா, நான் சொல்றதக் கேளும். மாப்பிள்ள, இது கடவுளுக்கே பொறுக்காது! மாப்பிள்ள, ஊரு ஒலகத்துல எங்கேயும் இப்டி நடக்காது! நல்லா நெனச்சிப்பாரும். மாப்பிள்ள, ஒருகாலத்துல ஒய்யா அவரு வீட்டச்சுத்தி ‘செருவ’ அடைக்க என்னக் கூப்பிட்டார். நானும் கறுக்குமட்டய வச்சி பன ஓலயச் சாத்தி நல்லா அடச்சிக்